ஆ. விஷ்ணு வர்தினி
தொழில்நுட்ப நிறுவனமான எப்சன் சவுத்ஈஸ்ட் ஏஷியா, மார்ச் 18ஆம் தேதி, இயற்கைக்கான உலகளாவிய நிதியத்துடனான தனது பங்காளித்துவத்தை அறிவித்தது.
தென்கிழக்காசிய நாடுகளின் கடல், சதுப்பு நிலப் பகுதிகளை மீட்டெடுக்கும் பணிகளிலும் பருவநிலை முயற்சிகளிலும் கூடுதல் கவனம் செலுத்துவது இக்கூட்டு முயற்சியின் நோக்கம் ஆகும்.
'கடற்பவள முக்கோணம்' என்று அழைக்கப்படும் முக்கியக் கடற்பகுதியில் கடல் மீட்புப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்தோனீசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடற்பகுதிகளிலும், பிலிப்பீன்ஸின் அலையாத்திக் காட்டுப் பகுதிகளிலும் இம்முயற்சிகள் இடம்பெறும்.
பருவநிலை மாற்றங்களும் சுற்றுலாத்துறையின் நிலைத்தன்மையற்ற நடவடிக்கைகளும் இந்தப் பகுதிகளைப் பாதித்து வருகின்றன. பருவநிலை மாற்றங்களால் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய தென்கிழக்காசிய நாடாகக் கண்டறியப்பட்டுள்ளது வியட்நாம்.
நீடித்த நிலைத்தன்மை வாய்ந்த தொழில்துறைக்கான முயற்சிகளும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளும் வியட்நாமில் திட்டமிடப்பட்டுள்ளன.
குறிப்பாக, சிங்கப்பூரின் தெற்குத் தீவுகளையும் கடல் பகுதிகளையும் பாதுகாக்கும் முயற்சிகள் அமலாக்கம் காணவிருக்கின்றன.
கென்ட் ரிட்ஜ் பகுதியில் மரம் நடும் முயற்சியை வழிநடத்தும் திட்டத்தையும் எப்சன் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், தென்கிழக்காசிய நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையிலான இயற்கைக் கல்வி நிகழ்ச்சிகளை வகுக்கவும் இருதரப்பும் உறுதியளித்துள்ளன. மெய்நிகர் அரும்பொருளகங்களும் கலந்துரையாடல்களும் இவற்றில் அடங்கும்.
"இயற்கையுடன் இணைந்து மனிதர்கள் வாழவேண்டும். அத்தகைய சூழலை ஏற்படுத்தும் அர்த்தமுள்ள முயற்சிகளை வகுக்க எப்சன் நிறுவனத்துடன் நாங்கள் இணைந்துள்ளோம்.
"இதன்மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகள் பொருளாதாரத்துக்கும் சாதகமாக அமையும் என்று நம்புகிறோம்," என்றார் இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ஆர். ரகுநாதன்.

