அமெரிக்காவின் மேன்ஹேட்டனில் ஓர் உயரமான அலுவலகக் கட்டடம். அங்கு தினமும் ஒரு பிரச்சினை. காலையில் வருபவர்கள், மதிய உணவுக்கு வெளியே செல்பவர்கள், இரவில் வீடு திரும்புபவர்கள் அனைவரும் மின்தூக்கிக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. வருபவர்களின் அதிருப்தியை உணர்ந்த கட்டட மேலாளர், ஊழியர்களிடம் ஆலோசனை கேட்டார்.
வெகுநேரம் காத்திருப்பவர்கள், செய்வதற்கு ஒன்றுமில்லாமல் அதிருப்தி அடைகிறார்கள் என்று குறிப்பிட்ட ஓர் ஊழியர், மேலிருந்து கீழ்வரை பெரிய கண்ணாடிகளை மின்தூக்கி அருகில் பொருத்தலாம் என்று ஆலோசனை கூறினார்.
காத்திருப்போர் தங்களையும் பிறரையும் கண்ணாடியில் பார்க்கத் தொடங்கினர். புகார் நின்றது.
1950களில் நடந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம், உண்மையா என்பதற்கு ஆதாரமில்லை. ஆனால், வரிசை பிடித்து ஒன்றுக்காக காத்திருப்பதில் பல அம்சங்கள் அடங்கிஉள்ளன என உணர முடிகிறது.
நேற்று முன்தினம் அயோன் ஆர்ச்சர்ட், எம்பிஎஸ் கடைத்தொகுதிகளில் $300 மதிப்புள்ள 'ஸ்வாட்ச்-ஒமேகா' கைக்கடிகாரம் வாங்க மணிக்கணக்காக ஒரு கூட்டம் காத்திருந்தது.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த அயோன் ஆர்ச்சர்ட் கிளைக்கு வந்த காவலர்களிடம், "உங்கள் துப்பாக்கியால் என்னைச் சுடுங்கள்," என்று ஆடவர் ஒருவர் முகக்கவசத்தை இறக்கிச் சவால் விட்டார்.
வரிசை பிடித்து நின்றவர்களில் இளம்பெண் ஒருவர் மயங்கி விழுந்ததாகவும் கூறப்பட்டது.
இருப்பில் இருந்ததோ 100 கைக்கடிகாரங்கள். இதை ஏன் ஸ்வாட்ச் நிறுவனத்தார் முன்னரே தெரிவிக்கவில்லை என்று காத்திருந்தோர் குமுறினர்.
சிங்கப்பூரில் மட்டுமன்றி பல நாடுகளில் இந்த நிலை ஏற்பட்டதாகவும் அறியப்படுகிறது. ஆனால், இதே கைக்கடிகாரங்கள் வரும் வாரங்களில் இருப்பில் இருக்கும் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.
வெகுநேரம் காத்திருந்து ஒன்று கைக்கு எட்டும்போது அதில் அலாதி இன்பம் காணும் சிலரும் உண்டு. 'பிறருக்குக் கிடைப்பதற்குமுன் என் கையில் அது இருக்க வேண்டும்' என்று எண்ணும் கூட்டமும் உண்டு.
இந்த ஸ்வாட்ச் கைக்கடிகாரத்தை எப்படியோ வாங்கிவிட்ட சிலர், 'கரோசல்' விற்பனைத் தளத்தில் $19,000க்கு விற்பதாக ஷின்மின் நாளிதழ் நேற்று கண்டறிந்தது.
இருப்பு குறைவாக உள்ள ஒரு பொருளுக்கு வரிசை, குறைந்த கட்டணத்தில் சில மணி நேரம் மட்டுமே கிடைக்கும் உணவுக்கு வரிசை, புத்தம் புதிய திறன்பேசிக்கு வரிசை என்று மக்கள் காத்திருக்கத் தயாராக இருக்கும்போது, அவர்களின் உணர்ச்சிகளை அறிந்து அந்தந்தக் கடை நிறுவனங்களும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
காத்திருக்கக்கூடிய நேரத்தை முன்னரே தெரிவித்தல், தொலைக்காட்சித் திரைகளைப் பொருத்துதல், சஞ்சிகைகள் வழங்குதல் எனப் பல்வேறு வழிகளை நாடலாம்.
செய்தி: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்,
த வாஷிங்டன் போஸ்ட்

