ஆ. விஷ்ணு வர்தினி
சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனத்தின் 'இளம் சமூகத் தொழில்முனைவர்கள் திட்டம்' 2010ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்வழி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளையர்கள், சிங்கப்பூரிலும் அதற்கு அப்பாலும் தங்களின் சமூக அமைப்புகளைத் தொடங்கவோ விரிவுபடுத்தவோ வாய்ப்பு பெறுவர்.
கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் மூன்று அணிகள் வென்றுள்ளன. அவற்றுள் சிங்கப்பூரின் 'சோஜோர்னர் பிரதர்' திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தை உருவாக்கியவர் திரு ஜோஷுவா லாம், 31. சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களின் ஒட்டுமொத்த நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் 'சோஜோர்னர் பிரதர்' என்ற செயலியை திரு லாம் வடிவமைத்தார்.
திறன்மிக்க வெளிநாட்டு ஊழியர்களை இச்செயலி மூலம் முதலாளிகள் கண்டறிவதுடன் ஊழியர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படுவதையும் செயலி உறுதிசெய்வதாகக் கூறப்பட்டது. தங்களின் ஊழியர்களின் சுகாதாரத் தேவைகளை முதலாளிகள் கண்காணிக்கவும் அதற்கேற்ற சுகாதார நிதித் திட்டங்களுக்குப் பதிந்துகொள்ளவும் செயலி வழிசெய்கிறது.
"நிச்சயம் வேலை கிடைக்கும் என்று உறுதியளிக்கும் சில முகவர்கள், வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து பணம் பறிப்பதால் சம்பாதிப்பதற்கு முன்னரே அவர்கள் கடனில் மூழ்கடிக்கப்படுகின்றனர்," என்றார் திரு லாம். வெளிநாட்டு ஊழியர்களின் அறியாமையைத் தவறுதலாகப் பயன்படுத்திப் பணம் பறிக்கும் வழக்கம் சில நாடுகளில் உள்ளதை உணர்ந்த திரு லாம், தமது 'சோஜோர்னர் பிரதர்' திட்டம் விரிவடைந்து வெவ்வேறு நாடுகளில் பரிதவிக்கும் ஊழியர்களுக்குப் பயனளிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
போட்டியில் 'வெம்பி டெக்னாலஜிஸ்', 'கன்பூர் ஃபிளவர்சைக்கிளிங்' ஆகிய இரண்டு இந்திய அணிகளின் திட்டங்களும் வெற்றி பெற்றன. குறைந்த விலையில் பார்வையிழந்தோருக்கு உதவும் தொழில்நுட்ப வசதிகளை அமைக்க முடிவெடுத்த 'வெம்பி டெக்னாலஜிஸ்' அணி, மின்-பிரெயில் தொழில்நுட்பத்தைத் தன் திட்டமாக முன்வைத்துள்ளது.
இந்தியாவில் விரயமாகும் பூக்களைக் கொண்டு வீகன் தோல், ஊதுபத்திகள் ஆகியவற்றை 'கன்பூர் ஃபிளவர்சைக்கிளிங்' அணி தயாரித்து வருகிறது. ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கவும் அணி திட்டமிட்டுள்ளது.
மொத்தம் 16 நாடுகளைச் சேர்ந்த 41 குழுக்கள், 109 இளையத் தொழில்முனைவர்கள் திட்டத்தில் கலந்துகொண்டனர்.

