அமெரிக்காவில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவத்தில் நச்சுணவு உண்ட 19 வயது இளையர் ஒருவர் தன் அனைத்து கைவிரல்களுடன் இரு கால்களையும் இழக்க நேரிட்டது. உணவகத்தில் சாப்பிட்ட பிறகு, மிச்சப்பட்ட கோழியையும் நூடல்சையும் நண்பர் ஒருவர் தனக்குக் கொடுத்ததை அடுத்து அதைச் சாப்பிட்ட அந்த இளையர், 20 மணிநேரத்திற்குப் பிறகு வாந்தி, இடுப்பு வலி, காய்ச்சல், குளிர், மூச்சுத் திணறல், கழுத்தில் விறைப்பு, மங்கலான கண்பார்வை போன்ற பாதிப்புகளுக்கு ஆளானார்.
இளையரின் உடல் முழுவதும் காயங்கள் போன்றிருந்த புள்ளிகள், உடலுக்குள் ரத்தக் கசிவை ஏற்படுத்திய ரத்த உறைவுக்கான அறிகுறிகள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரத்த உறைவுகள், கைகளுக்கும் கால்களுக்கும் செல்லும் பிராணவாயுவைத் தடுத்தன. இதனால், நோயாளியின் கைவிரல்களும் கால்களும் துண்டிக்கப்பட்டன.
அவரின் நிலைக்கு நச்சுணவுதான் காரணம் என்று ஒரு சாராரும் மூளைக்காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசியை அவர் முழுமையாகப் போட்டுக்கொள்ளவில்லை என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர்.
எனினும், மிச்சப்படும் உணவால் உபாதைகள் ஏற்படலாம் என்கின்றனர் நிபுணர்கள். பாதி ரொட்டித் துண்டு, பாதியளவு சூப் போன்றவற்றில் வேறொருவரின் வாய் மற்றும் எச்சில் பட்டிருக்கும். இந்நிலையில் அவை மாசுபடுத்தப்பட்டவை.
உணவு அதிகமாக இருப்பதாகத் தோன்றினால், கரண்டியைக் கொண்டு தேவையான உணவை எடுத்துக்கொண்டு மிச்சத்தைப் பிறகு சாப்பிடலாம். பால், பாலாடைக்கட்டி, பாலேடு போன்றவற்றைக் கொண்ட உணவுவகைகளிலும் அதிகச் சத்துள்ள குழம்பிலும் பாக்டீரியா வளரும் சாத்தியம் அதிகம் என்பதால் அவற்றைத் தவிர்க்கவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
செய்தி: நியூயார்க் போஸ்ட்

