உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 94வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் 24 பிரிவுகளுக்கு ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்கம், சிறந்த நடிகர்கள், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
சிறந்த நடிகர், நடிகை
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் முதன்முறையாக ஆஸ்கார் விருதை வென்றுள்ளார்.
'கிங் ரிச்சர்டு' படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.
'தி ஐய்ஸ் ஆஃப் டாமி பேய்' என்ற திரைப்படத்தில் நடித்த ஜெசிகா சாஸ்டெய்ன் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த துணை நடிகருக்கான விருதினை டிராய் கோட்சர் பெற்றார்.
சிறந்த துணை நடிகைக்கான விருதினை அரியானா டிபோஸ் வென்றார்.
சிறந்த பாடலுக்கான விருது ஜேம்ஸ் பாண்ட் நடித்த 'நோ டைம் டூ டை'க்கு கிடைத்துள்ளது.
'தி பவர் ஆப் தி டாக்' படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குநராக ஜேன் கேம்பியன் விருது வென்றார்.
சிறந்த திரைப்படம்
'ஷியான் ஹெட்டர்' இயக்கிய 'கோடா' திரைப்படம் சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது பிரெஞ்ச் படத்தின் மறுபதிப்பு. இந்த விருதை 'கோடா' நடிகர்களும் குழுவினரும் பெற்றுக்கொண்டனர்.
'என்கான்டோ' (Encanto) படத்திற்கு சிறந்த அனிமேஷன் விருது கிடைத்துள்ளது. பைரன் ஹோவார்ட், ஜேம்ஸ் புஷ் இணைந்து இந்தப் படத்தை இயக்கி இருந்தனர்.
ஆறு விருதுகள் பெற்ற படம்
ஒளிப்பதிவு, இசை, விஷூவல் எஃபெக்ட்ஸ், ஒரிஜினல் ஸ்கோர், படத்தொகுப்பு, புரொடக்சன் டிசைனிங் ஆகிய பிரிவுகளில் 'டியூன்' (DUNE) திரைப்படத்திற்கு ஆறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கார் விருதை இப்படத்திற்காக கிரேக் ஃபிரேசர் வென்றார்.
சிறந்த இசையமைப்பாளருக்கான ஆஸ்கார் விருதை 'டியூன்' படத்திற்காக மேக் ரூத், மார்க் மங்கினி, தியோ கிரீன், டக் ஹெம்பில், ரான் பார்ட்லெட் ஆகிய ஐவரும் பெற்றுக்கொண்டனர்.
சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை 'பெல்ஃபாஸ்ட்' படத்திற்காக கென்னித் பிரனாக் வென்றுள்ளார்.
குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதை 'தி லாங் குட்பை' வென்றுள்ளது.
சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை 'க்ரூல்லா' திரைப்படத்திற்காக ஜென்னி பெவன் வென்றார்.
இந்தியருக்கு விருது
சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கர் விருைத 'டியூன்' படத்திற்காக நால்வர் பெற்றுக்கொண்டனர். இவர்களில் நமித் மல்கோத்ரா என்னும் இந்தியரும் ஒருவர். லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள இவரது நிறுவனம் 'டியூன்' படத்திற்கு விஷுவல் எஃபெக்ட் பணிகளைச் செய்துள்ளது. இவரது நிறுவனம் வாங்கும் 7வது ஆஸ்கார் விருது இதுவாகும்.

