'பிரிட்ஜ்' எனும் விளையாட்டில் செயற்கை நுண்ணறிவு முறை ஒன்று எட்டு உலக விருது வெற்றியாளர்களை வீழ்த்தியுள்ளது. இந்த விளையாட்டில் இதுவரை செயற்கை நுண்ணறிவு முறைகளால் அதிகம் சோபிக்கமுடியாமல் இருந்தது.
இந்த சாதனை, செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது. 'பிரிட்ஜ்' விளையாட்டில் வெல்ல மனிதர்களிடம் மட்டுமே அமைந்துள்ளதாகக் கருதப்படும் முடிவெடுக்கும் திறன் இருப்பது அவசியம் என்பது இதற்குக் காரணம்.
இதற்குமுன் சதுரங்கம், 'கோ' போன்ற விளையாட்டுகளில் செயற்கை நுண்ணறிவு முறைகள் மனிதர்களை வென்றிருக்கின்றன. ஆனால் அவற்றைவிட 'பிரிட்ஜ்' விளையாட்டில் வெல்வது சவாலானது என்று சொல்லப்படுகிறது.
'நூக்' என்ற பெயரைக் கொண்ட செயற்கை நுண்ணறிவு முறையில் பங்கேற்ற இந்தப் போட்டி இரண்டு நாள்களுக்கு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றது. பிரான்ஸின் புதிதாகத் தொடங்கப்பட்ட 'நூக்ஏஐ' எனும் நிறுவனம் இந்த முறையை ஐந்து ஆண்டுகளாக உருவாக்கி வந்துள்ளது.
1996ஆம் ஆண்டு 'ஐபிஎம்' நிறுவனத்தின் 'டீப் புளூ செஸ்' செயற்கை நுண்ணறிவு முறை சதுரங்க வீரர் கேரி கெஸ்பரொவை வென்றது. அதுவே செயற்கை நுண்ணறிவுக்கு விளையாட்டு உலகில் கிடைத்த முதல் வெற்றி.

