வரும் வெள்ளிக்கிழமை முதல் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள அனைத்து பயணிகளுக்கும் சிங்கப்பூர் தனது எல்லைகளைத் திறக்கவுள்ளது. இதைத் தொடர்ந்து பல சிங்கப்பூரர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆவலாகக் காத்திருக்கின்றனர்.
சுற்றுப்பயணத் துறை மீண்டும் சூடுபிடிப்பதைத் தொடர்ந்து இந்தோனீசியாவின் பாலி தீவு உள்ளிட்ட பகுதிகளில் சலுகை விலையில் சொகுசு பங்களாக்களில் தங்கலாம். சில இடங்களில் இப்படிப்பட்ட சொகுசு தங்குமிடங்கள் பாதி விலைக்கும் கிடைக்கின்றன.
உதாரணமாக, தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள 'வால்டோர்ஃப் எஸ்டோரியா' எனும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க ஒரு நாளைக்கு 305 வெள்ளி செலவாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கொள்ளைநோய்ப் பரவலுக்கு முந்தைய காலத்தில் செலுத்தவேண்டிய கட்டணத்தில் கிட்டத்தட்ட பாதி.
பாலியிலும் சலுகை விலையில் சில இடங்களில் தங்கும் வசதிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சில சொகுசு பங்களாக்களில் தங்க ஒரு நாளைக்குக் கட்டணம் கொள்ளைநோய்ப் பரவலுக்கு முந்தைய காலத்தில் இருந்ததில் கால் பங்கு எனச் சொல்லப்படுகிறது.
2020ஆம் ஆண்டு கொள்ளைநோய்ப் பரவல் தலைதூக்கியபோது சுற்றுப்பயணத் துறை எதிர்நோக்கிய சவால்களைச் சமாளிக்க சுற்றுப்பயணச் சேவைகளுக்கு முதலில் பதிவுசெய்து பின்னர் கட்டணம் செலுத்த வகைசெய்யும் திட்டங்கள் அறிமுகமாயின. ஈராண்டுகளுக்குப் பிறகு இத்தகைய சில திட்டங்கள் இன்னமும் நடப்பில் உள்ளன.
தென்கிழக்காசியாவுக்கு அப்பால் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் இயற்கை அழகு கொஞ்சும் ஜப்பானுக்குச் செல்ல ஆசைப்பட வாய்ப்புள்ளது. அனால், தற்போதைய நிலவரப்படி ஜப்பானின் எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை. எனினும், வரும் மாதங்களில் இந்நிலையும் மாறிவிடும் என்று சுற்றுப்பயணத் துறை கவனிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

