ஆங்கிலத்தில் "Ptosis" எனப்படும் கண் இமைத் தொய்வு, ஒரு மருத்துவக் கோளாறு. கண்ணின் மேல் இமை தொங்கிப்போய் அழகிய வடிவத்தை மாற்றிவிடும் இந்தச் சிக்கலுக்கு மருத்துவரீதியாகத் தீர்வுகாணாமல் அலட்சியப்படுத்தினால் ஒருவரது வாழ்க்கைத் தரம் வெகுவாக பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.
கண் இமைகளின் அசைவுகளைக் கட்டுப்படுத்தும் தசை வலுவிழந்தால் இத்தகைய நிலை ஏற்படும். சிலருக்கு லேசான மாற்றம் தெரிந்தாலும் வேறு சிலருக்கு கண்விழியை மறைக்குமளவு இமை தொங்கிப்போய்விடுவது உண்டு. இதனால் பார்வை சிறிதளவோ முழுதுமாகவோ மறைக்கப்படும்.
யாருக்கு பாதிப்பு?
இந்தக் குறைபாடு சிறியவர்கள் பெரியவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடும். இதில் இரண்டு வகைகள் உள்ளன.
முதலாவது, மரபணுக் கோளாறு காரணமாக பிறந்த சிசுக்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் கண் இமை தொங்குவதுண்டு. இந்தக் குழந்தைகள் கண்ணைச் சுருக்கிக்கொண்டு சரியாகப் பார்க்க முயல்வர். சில பிள்ளைகள் கழுத்தை அல்லது தலையைச் சாய்த்து தெளிவாகத் தெரிகிறதா என்று பார்ப்பர்.
இவர்களுக்கு அரிய வாய்ப்பாக கண் இமைத் தொய்வைச் சரிசெய்யும் மருத்துவ முறை அமைகிறது.
12 வயது நிறைவடைந்த பிறகே பிள்ளைகளுக்கு இதைச் செய்ய முடியும் என்று 'அல்லூய்ர் பிளாஸ்டிக் சர்ஜரி'யில் அழகு சிகிச்சை நிபுணரான டாக்டர் சேமுவெல் ஹோ கூறினார். சிங்கப்பூரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏறக்குறைய 700 பேருக்கு கண் இமைத் தொய்வைச் சரிசெய்யும் சிகிச்சையை இவர் செய்திருக்கிறார்.
"ஒருவேளை குழந்தையின் கண்பார்வைத் திறனில் மாற்றம் ஏற்படுமேயானால் முன்கூட்டியே அறுவைச் சிகிச்சையை செய்துகொள்வது நல்லது," என்றார் டாக்டர் ஹோ.
இரண்டாவது வகையில், முப்பது முதல் நாற்பது வயதினருக்கு கண் இமைத் தொய்வு ஏற்படுவது உண்டு. வயது கூடுதல், கண்களில் காயம் ஏற்படுதல் அல்லது சிலவகை கண் சிகிச்சைகள் போன்றவற்றால் கண் இமைகள் பாதிக்கப்படக்கூடும்.
"வயதாகும்போது நம் தோல் மெலிவடைவதால் கண் இமைகள் தொங்கிப்போகும். முதியவர்கள் என்றில்லை, என்னிடம் இந்தப் பிரச்சினைக்காக வரும் நோயாளிகளில் 40 விழுக்காட்டினர் 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்," என்று டாக்டர் ஹோ கூறினார்.
அடிக்கடி இரட்டை கண் இமைக்கான ஒட்டுவில்லை அல்லது பசையைப் பயன்படுத்துதல், செயற்கை கண் இமை முடிகளை ஒட்டிக்கொள்ளுதல், விழி ஒட்டுவில்லைகளை அணிதல் ஆகியவற்றால் இளம் வயதில் இமைத் தொய்வு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதை அவர் விளக்கினார். கண்களை அடிக்கடி தேய்ப்பதாலும் இவ்வாறு கண் இமைத் தொய்வு நேரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
எப்படிக் கண்டுபிடிப்பது?
புகைப்படங்களில் நீங்கள் தூங்குவதுபோல் காணப்பட்டாலோ புருவங்களும் கண் இமைகளும் சமச்சீராக இல்லாவிட்டாலோ கண் இமைத் தொய்வு உங்களுக்கு ஏற்பட்டிருப்பதை நீங்கள் அறியலாம்.
"தலைவலி, இமைகளில் அழுத்தம், சோர்வு போன்றவையும் ஏற்படும். பலருக்கு இது ஒரு மருத்துவச் சிக்கல் என்று தெரிவதில்லை.
"முதுமையடைதலின் ஓர் அங்கம் என்றோ பிறந்ததில் இருந்தே இருப்பதுதானே என்றோ அலட்சியப்படுத்துகின்றனர்," என்றார் டாக்டர் ஹோ.
கண் இமைத் தொய்வை தொடக்கத்திலேயே சரிசெய்யாவிட்டால் பின்னர் இது ஒற்றைத் தலைவலிக்கு இட்டுச்செல்லக்கூடும்.
நெற்றியில் சுருக்கங்களும் ஏற்படும் சாத்தியங்களும் அதிகம் என்று கூறப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் நாளடைவில் பார்வைக் குறைபாடு, சோர்வு, கண் எரிச்சல் போன்றவையால் துன்பப்பட நேரும்.
நற்செய்தி:
இந்தக் குறைபாடு உள்ளவர்கள் கலங்கத் தேவையில்லை. நிபுணத்துவ மருத்துவர் மூலம் கண் இமைத் தொய்வை நாற்பத்தைந்தே நிமிடங்களில் சரிசெய்ய முடியும்.
"அண்டர்த்ரூ" எனும் நவீன தொழில்நுட்ப முறையில் கண் இமைத் தொய்வுக்கு தீர்வு கிடைக்கிறது. இந்த முறையில் நோயாளி விரைவாக குணமடைவதுடன் தேவைப்பட்டால் அடுத்தடுத்து சில முறை திருத்தங்களும் செய்யலாம்.
சிகிச்சை எடுத்தால் மீண்டும் கண் இமைத் தொய்வு ஏற்படும் வாய்ப்பும் மிகக் குறைவு என்றார் டாக்டர் ஹோ.