நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆரோக்கியமாக வாழ்வதற்கு நோய் எதிர்ப்புச் சக்தி வலுவாக இருக்கவேண்டியது அவசியம்.
கொவிட்-19 கிருமிப்பரவலுக்குப் பிறகு அனைவரின் அன்றாட வாழ்க்கைமுறையும் மாறிவிட்டது என்றே சொல்லவேண்டும்.
வேலை தொடர்பான கடமைகள், வீட்டு வேலைகள் என இரண்டையும் கையாளவேண்டியிருக்கிறது. தொடர்ச்சியான காணொளிச் சந்திப்புகள், வீட்டுவேலைகள், பிள்ளைகளைப் பராமரிப்பது என மாறி, மாறிச் செய்யவேண்டியிருப்பதில் அதீத சோர்வு ஆட்கொள்கிறது.
'மிலியு இன்சைட்' எனும் ஆய்வு நிறுவனம் 1,075க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களிடம் அண்மையில் நடத்திய கருத்தாய்வில், கொவிட்-19 நோய்ப் பரவலுக்குப் பிறகு கூடுதல் நேரம் வேலைசெய்வதாக பாதிப் பேர் கூறியுள்ளனர். இவ்வாறு கூறியவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அன்றாடம் இரண்டு மணி நேரம் கூடுதலாக வேலைபார்ப்பதாகச் சொல்லியுள்ளனர்.
நீண்ட நேரம் வேலைசெய்வதால் தொடர்ச்சியான மனஅழுத்தமும் சோர்வும் ஏற்படும் என்றும் நாளடைவில் இவை நோய் எதிர்ப்புச் சக்தியை பாதிக்கும் என்றும் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
அடிக்கடி உடல்நலம் குன்றினாலோ வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட்டாலோ எந்நேரமும் சோர்வாக இருந்தாலோ வாழ்க்கைமுறையில் அணுக்கமான கவனம் செலுத்தவேண்டும் என்பதற்கான அறிகுறி என்று இவர்கள் சொல்கிறார்கள்.
நோய் எதிர்ப்பு ஆற்றலை எப்படி அதிகரிப்பது? வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமானது முதல் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடலாம். பதப்படுத்திய உணவுகளைக் குறைத்துக்கொண்டு ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றலாம்.
தியானப் பயிற்சி மனஅழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுவதாகத் தொழில்முறை சுகாதாரப் பராமரிப்பாளர்களும் விளையாட்டாளர்களும் கூறுகின்றனர்.
தினசரி நிறைய தண்ணீர் அருந்துதல், அன்றாடம் தேவையான அளவு சூரிய வெளிச்சம் உடலில் படுவதை உறுதிசெய்தல், துணை உணவுப் பொருள்களை உணவில் சேர்த்துக்கொள்ளுதல் என, சின்னச் சின்ன மாற்றங்கள்கூட நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்ட உதவும். இவற்றுடன் ஊட்டச்சத்து கொண்ட துணை உணவுப் பொருள்களையும் எடுத்துக்கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக, 'லேக்டொஃபெரின்' எனும் பால் புரதச் சத்துள்ள துணை உணவுகளைச் சொல்லலாம். தாய்ப்பாலிலும் பசும்பாலிலும் காணப்படும் இந்தப் புரதம் நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
நுண்ணுயிரிகள், கிருமிகள் ஆகியவற்றின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும் இந்தப் புரதத்தை, நுரையீரல் தொற்றைத் தடுக்கவும் குணப்படுத்தவும் பயன்படுத்துவது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கொரோனா கிருமித்தொற்றைக் கையாள்வதிலும் இந்த ஆய்வுகள் கவனம் செலுத்துகிறது.

