நாள் முழுவதும் ஓடியாடி வேலைசெய்த பிறகு இரவில் போதிய உறக்கம் கொள்வது உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு தருவதுடன் மறுநாள் புத்துணர்ச்சியுடன் கண்விழிக்கவும் உதவுகிறது. அன்றைய நாளில் விழிப்புடன் செயலாற்றவும் துணைநிற்கிறது.
ஆனால் எல்லாருக்கும் எளிதில் வருவதில்லை உறக்கம். நல்ல உறக்கம் என்பதை, எவ்வளவு நேரம் உறங்குகிறோம், தொடர்ச்சியாகத் தூங்குகிறோமா, ஆழ்ந்து உறங்கமுடிகிறதா என்ற மூன்று அம்சங்களைப் பொருத்தே முடிவுசெய்ய இயலும் என்கிறார் 'சன்டோரி வெல்னஸ்' எனும் ஜப்பானிய ஆய்வுநிறுவனத்தில் பணிபுரியும் மருத்துவர் டைசுகே டகேமோட்டோ.
படுக்கையில் படுத்த அரை மணி நேரத்திற்குள் எளிதில் உறங்குகிறீர்களா? இரவு முழுவதும் அதிகம் தடையின்றித் தூங்க முடிகிறதா? உங்கள் வயதுக்குப் பரிந்துரைக்கப்படும் நேரம் கண்ணுறக்கமும் விழிக்கும்போது புத்துணர்ச்சியும் கிடைக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதில் 'ஆம்' என்றால் நீங்கள் நன்றாக உறங்குவதாக பொருள்படும்.
இவற்றுக்கான உங்கள் பதில் 'இல்லை' என்றால், மனஅழுத்தம், ஆரோக்கியமற்ற உணவுமுறை போன்றவை அதற்குக் காரணமாக இருக்கலாம்.
இதற்கான தீர்வாக, மனஅழுத்தத்தை சரியாகக் கையாளுதல், சமச்சீரான உணவு, உறங்கச் செல்லும் முன் பின்பற்றும் நடைமுறைகள் போன்றவற்றை வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
உறங்கும் முன் மனத்துக்கு இதமான மெல்லிய இசையைக் கேட்கலாம். ஆழ்ந்து மூச்சுவிடும் பயிற்சிகளைச் செய்யலாம். மதுபானம், காப்பி போன்றவற்றைத் தவிர்த்துவிடலாம். படுப்பதற்கு சில மணி நேரம் முன்பாகவே இரவு உணவை முடித்துக்கொள்வதும் சிறந்த வழி.
நல்ல உறக்கம் தோலுக்கும் புதுப்பொலிவு தருகிறது. ஆழ்ந்து உறங்கும்போது உடலில் உள்ள அணுக்களின் வளர்ச்சிக்கும் புதுப்பிப்புக்கும் தேவையான புரதங்கள் உற்பத்தியாகின்றன. தோலை இளமைப் பொலிவுடன் பராமரிக்க இவை உதவுகின்றன.

