'என்எஃப்டி' பொருள்களின் மூலம் பெறப்படும் வருமானத்தின் மீது வருமான வரி விதிக்கப்படும் என்று நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் கடந்த மாதம் அறிவித்தார். ஆயினும், அதன் விற்பனையால் பெறப்படும் லாபத்திற்கு வரியில்லை என்று கூறினார்.
இதற்கு முன்னதாக மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம், 'என்எஃப்டி' பொருள்களில் முதலீடு செய்யும்போது கவனம் தேவை என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் ஏற்கெனவே அறிவுறுத்தியதை வலியுறுத்தினார். சில்லறை விற்பனை முதலீட்டாளர்களுக்கு இது தகுந்த முதலீடு அல்ல என்றும் திரு தர்மன் கூறினார்.
மற்ற முதலீடுகள் போல 'என்எஃப்டி' பொருள்கள் மீது செய்யப்படும் முதலீடு இருக்காது என்பதை நன்கு புரிந்துகொண்டு செயல்படவேண்டும் என்று 'புலோக்செய்ன்' முதலீட்டாளர் மற்றும் 'வெப்பி எஸ்ஜி' செயலி மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சத்தியராஜ் விஜயா, 31, தெரிவித்தார்.
ஆழம் அறியாமல் அகலக்கால் வைப்பது அபாயகரமானது என்றாலும் 'என்எஃப்டி'யை விட்டு விலகிக்கொள்வது தீர்வாகாது என்றார் அவர். தமது முதலீட்டின் மூலம் மாதத்திற்கு 3,000 வெள்ளிவரை லாபம் பெறும் திரு சத்தியராஜ், "சொத்து விற்பனை முதல் ஆடை அலங்கார நிகழ்ச்சிகள் வரை என்எஃப்டியே எதிர்காலமாக திகழும். என்எஃப்டியின் பயன்பாடு எல்லையற்றது," எனக் கருதுகிறார்.

