மின்னிலக்கச் சுற்றுச்சூழலை உண்மையான சூழலைப் போல அனுபவிக்க வழிசெய்யும் 'மெட்டார்வர்ஸ்' என்ற முப்பரிமாண மெய்நிகர் உலகக் கட்டமைப்பில் 'என்எஃப்டி' விற்பனைகள் கூடுதலாக நிகழலாம். தற்போது கணினி விளையாட்டுகள் பெரும்பாலும் அத்தகைய சூழலில் அமைந்திருந்தாலும் வருங்காலத்தில் பெரிய வாடிக்கையாளர் சந்தைகள் அதில் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திறன்பேசி, இணையம் ஆகியவற்றை அடுத்து பெரிய தொழில்நுட்பப் புரட்சியாகக் கருதப்படும் மெட்டார்வர்சிலும் சிலர், ஓவியங்களை 'என்எஃப்டி' வழி விற்கத் தயாராகி வருகின்றனர்.
மெட்டாவர்ஸ் சமூக ஊடகத்தின் மூலம் கலைப்படைப்புகளை ரசிக்கும் அனுபவம் மேம்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாக முழுநேர ஓவியக்கலைஞர் லட்சுமி மோகன்பாபு (படம்), 53, தெரிவித்தார். இவர் அண்மையில் தாம் வடிவமைத்த கலைப்படைப்புகளை நிலவுக்கு அனுப்பினார். தமது முப்பரிமாண கலைப்படைப்புகள், மெட்டாவர்சின் இருவழித்தொடர்பு அம்சத்தைப் பெறப்போவதைத் தாம் ஊகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
"நிஜ உலகில் கலைப்பொருள்களைச் சேகரிப்பவர்களின் எதிர்பார்ப்புகளை கலைஞர்கள் ஓரளவுக்கு அறிய முடியும். ஆனால் மெட்டாவர்ஸ் உலகில் இது எப்படி இருக்கும் என்பது போகப்போகத்தான் நமக்குத் தெரிய வரும்," என்று அவர் கூறினார்.

