எச்சரிக்கை: முற்றிலுமாகப் பறிபோகலாம்
புகைபிடிப்பதால் புற்றுநோய், சுவாச நோய்கள், இதய நோய்கள் உள்ளிட்டவை வர வாய்ப்புள்ளதைப் பலரும் அறிவர்.
இந்நிலையில், புகைப்பது கண் பார்வையையும் பாதித்து, பார்வைத்திறனை அறவே பறித்துவிடக்கூடும் என்கிறார் இந்தியாவின் ஹைதராபாத் நகரிலுள்ள சாதுராம் கண் மருத்துவமனையின் கண் அறுவை சிகிச்சை வல்லுநர் டாக்டர் ஆராதனா ரெட்டி விட்ரியோ.
சிகரெட் புகையிலுள்ள நச்சுப்பொருள்கள் இரத்த ஓட்டத்தில் கலந்து, கண் உட்பட உடல் முழுவதும் பரவிவிடுவதாக டாக்டர் ஆராதனா விளக்கினார்.
"இதனால், உலர்கண், கண்புரை, நீரிழிவு விழித்திரை நோய், முதுமை சார்ந்த கருவிழித் தழும்புச் சிதைவு, கண் நரம்புப் பிரச்சினைகள் போன்ற கண் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம். உரிய நேரத்தில் போதிய நடவடிக்கைகளை எடுக்காவிடில் அத்தகைய நோய்களால் பார்வைத்திறனை முழுமையாக இழக்கவும் நேரிடலாம். கூடுதலாக, புகையிலையிலிருந்து உருவாகும் புகையால் கண்ணைச் சுற்றியுள்ள திசுக்கள் பாதிக்கப்பட்டு, கண்ணிமையில் கோளாறும் கண்ணுக்குக் கீழே வீக்கமும் ஏற்படலாம்," என்றார் அவர்.
புகையிலைப் புகையில் 7,000க்கும் மேற்பட்ட அபாயகரமான வேதிப்பொருள்கள் உள்ளன. அவற்றில் சில கண்ணுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியவை.
புகைபிடிப்போர் தங்களது கண்ணலத்தைப் பாதுகாத்துக்கொள்ள இதோ சில வழிமுறைகள்:
புகைப்பதைக் குறைக்கலாம் அல்லது விட்டொழிக்கலாம்: ஒருவர் புகைப் பழக்கத்தைக் குறைப்பதை அல்லது கைவிடுவதன்மூலம் தமது கண்களை மட்டுமின்றி, தம்மைச் சுற்றியுள்ளோரின் கண்களையும் பாதிப்பில் இருந்து காக்கலாம்.
சத்தான உணவு: உயிர்ச்சத்து சி, இ, துத்தநாகம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட சத்துகள் அடங்கிய உணவை உண்பது கண் பாதிப்பு வாய்ப்பைக் குறைக்கும்.
திரைநேரத்தைக் குறையுங்கள்: நீண்ட நேரத்திற்குக் கைப்பேசி, கணினி, தொலைக்காட்சி பார்ப்பதைக் குறைப்பதும் கண் பாதிப்பைக் குறைக்கும்.
கண் பரிசோதனை: விழியாடியில் நச்சுப்பொருள்கள் சேரக்கூடும். அவ்வப்போது கண் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் கண் பாதிப்பைத் தவிர்க்க முடியும்.