ஆ. விஷ்ணு வர்தினி
திருக்குறள் சொல்லும் அறம் குறித்து விவாதித்தது இவ்வாண்டின் திருக்குறள் விழா. பேருரையாக இல்லாமல், இம்முறை வாதிடும் பட்டிமன்றமாக குறள் விழா அமைந்தது. பிரபல பேச்சாளர் சுகி சிவம் பட்டிமன்ற நடுவராக அமர்ந்து பேசினார்.
"திருக்குறள் அதிகம் வலியுறுத்துவது தனிமனித ஒழுக்கமா, சமுதாய அறங்களா" என்ற தலைப்பில் எட்டுப் பேர் விவாதித்தனர்.
தனிமனித ஒழுக்கத்தையே திருக்குறள் வலியுறுத்துகிறது என்று வாதிட்டவர்கள் இல்லற வியல் அதிகாரத்தை மேற்கோள் காட்டினர்.
குடும்பங்கள் இணைந்து சமூகமாகிறது. சமூகத்தின் அடிப்படை குடும்பம். எனவே சமுதாய அறத்தையே திருக்குறள் பேசுகிறது என்று எதிர்த்தரப்பினர் வாதிட்டனர்.
தனிமனிதர்கள் சமுதாயத்தை உருவாக்குவதால், திருக்குறள் ஒட்டுமொத்த சமுதாயத்துக்காகவே எழுதப்பட்டுள்ளது என்று தீர்ப்பு வழங்கினார் திரு சுகி சிவம்.
மேலும், பேச்சரங்கம், குறும் படக் காட்சிகள், பரிசளிப்பு என்று களை கட்டியது தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் 35வது திருக்குறள் விழா.
சனிக்கிழமையன்று இணையத் தில் மெய்நிகர் வழியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் இரா. தினகரனுக்கு இவ்வாண்டின் திருவள்ளுவர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
"மிகச்சிறு வயதிலேயே திருக்குறளை மனனம் செய்ய சொல்லி எனது தந்தை என்னை வளர்த்தார். அதன் காரணமாக, இன்றும் பல குறட்பாக்கள் என் மனதில் பதிந்திருக்கின்றன. வாழ்க்கையில் திருக்குறள் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறது," என்றார் இந்து அறக்கட்டளை வாரியத் துணைத் தலை வருமான இரா. தினகரன்.
தமிழுக்காகவும் தமிழருக்காகவும் செயலாற்றுபவர்களுக்காக 2014ஆம் ஆண்டில் இருந்து திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
விழாவின் சிறப்பு விருந்தின ராகப் பங்கேற்று உரையாற்றிய செம்பவாங் குழுத்தொகுதி நாடாளு மன்ற உறுப்பினரான விக்ரம் நாயர்," திருக்குறள் கூறும் அறிவுரைகளும் நற்பண்புகளும் சிறந்த எதிர்காலத்துக்கும் வெற்றிக்கும் நல்லதொரு பாதையை அமைக்கும்," என்றார்.
தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம், திருக்குறள் விழாவை ஒட்டி மழலையர் முதல் உயர்நிலைப் பள்ளி மாணவர் வரை பங்கேற்கும் பல போட்டிகளை நடத்தி வருவதை திரு விக்ரம் சுட்டிக்காட்டினார்.
மாணவர் போட்டிகள், தமிழ்ச் சான்றோர் குறித்த காணொளிகள் உருவாக்கம் முதலிய முயற்சிகளை தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் இவ்வாண்டு ஒருங்கிணைத்து வருவதாக கழகத்தின் தலைவர் திரு மு. ஹரிகிருஷ்ணன் தலைமை உரையில் குறிப்பிட்டார்.
ஆக அதிகமான குடும்பங்கள் இணையம் வழி பங்கேற்ற சிங்கப்பூர் சாதனை நிகழ்வை இவ்வாண்டு தொடக்கத்தில் கழகம் நடத்தியது.
இதில் தொடர்ச்சியாக 133 குடும்பங்கள் திருக்குறள் கூறின.

