ஹர்ஷிதா பாலாஜி
அழகிய படங்களுக்கு வண்ணமிட்டு மகிழும் வாய்ப்பை 'வண்ணத்தமிழ்' நிகழ்ச்சியின் மூலம் பாலர் பள்ளி மாணவர்கள் பெற்றார்கள். இந்தியன்.எஸ்ஜி (Indian.sg) நிறுவனம் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சி சென்ற சனிக்கிழமையன்று மெய்நிகராக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 60 பாலர் பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வண்ணம் தீட்டும் போட்டி, கதை சொல்லும் அங்கம், 'கஹூட்' இணைய வினாடி விடை விளையாட்டு ஆகியவற்றில் பங்கேற்றார்கள்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அங்கமாக புதையல் வேட்டை விளையாட்டு நடைபெற்றது. மாணவர்கள் வீட்டிலுள்ள பொருள்களை அவற்றின் தமிழ்ப்பெயர்களை வைத்து கண்டுபிடித்து இவ்விளையாட்டை விளையாடினார்கள்.
வண்ணத்தமிழ் நிகழ்ச்சியில் ப்ளே.இந்தியன்.எஸ்ஜி (play.Indian.sg) இணையத்தளமும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ் வார்த்தைகள், செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் உதவியோடு உருவாக்கப்பட்ட அவற்றின் உச்சரிப்புகள், படங்கள் ஆகியவை இந்த இணையத் தளத்தில் உள்ளன.
இவற்றின் உதவியோடு மேலும் பல தமிழ் வார்த்தைகளை மாணவர்கள் கற்றுக்கொள்ளலாம் என்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.

