சிங்கப்பூர் இலக்கியத்தைக் கொண்டாடும் மூன்று தமிழ் நிகழ்ச்சிகள் வரும் 16ஆம் தேதி சனிக்கிழமை 'தி ஆர்ட்ஸ் ஹவுசில்' நடைபெறவுள்ளன. உள்ளூர் இலக்கிய வாசிப்பை ஊக்குவிக்கும் 'சிங்கப்பூர் இலக்கியம் - நமது இலக்கியத்தை வாசிப்போம்' இயக்கத்தின் ஓர் அங்கமாக இந்நிகழ்ச்சிகளை சிங்கப்பூர் புத்தக மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.
♦ இளந்தமிழ் வாசிப்பும் இன்பத் தமிழ் விளையாட்டும் - உள்ளூர்த் தமிழ்ப் புத்தகங்கள் சிலவற்றை அரங்கில் வாசித்து உரையாடும் இளம் மாணவர்களுக்கான நிகழ்ச்சி. வாசிப்பின்வழி விரியும் உலகம், தமிழ் மொழியின் சுவை, உள்ளூர் எழுத்தாளர்கள் பற்றிய அறிதல், சிங்கப்பூர் தமிழ்ப் படைப்புகள் சார்ந்த அறிமுகம், தமிழ்ச் சொற்களுடன் மாணவர்களுக்கான விளையாட்டு.
நேரம்: பிற்பகல் மணி 2.15 - 3.45
♦ தங்கமுனைத் தருணங்கள் - தங்கமுனை விருது 2021 வெற்றியாளர்கள் சிலருடன் அவர்களது வெற்றிப் படைப்பின் பகிர்தலும் அதனைப் பற்றிய அரங்கக் கலந்துரையாடலும். கவிதை, சிறுகதை எனத் தங்கள் படைப்பின் பாதையில் தங்கமுனை அங்கீகாரம் மேலும் அவர்களை நகர்த்திச் செல்லும் அடுத்தகட்ட உற்சாகம். தம் படைப்பிற்கான ஆரம்ப உந்துதல் மற்றும் வாசிப்பின் மறுக்க முடியாப் பயன். படைப்பின் கருப்பொருள்களைத் தாங்கள் கண்டடையும் கணம், பிறகு எழுத்தாய் உருமாறும் பொறுப்பு. அவசர உலகில் இலக்கிய மகிழ்வு. முதல் எழுத்தின் நினைவோடை என அரங்கக் கலந்துரையாடல்.
நேரம்: மாலை மணி 4.00 - 5.30
பங்கேற்போர்: ஹேமலதா, ஜெய்குமார் பிரியா, ச. மோகனப்ரியா, சர்வான் (கூத்தப்பெருமாள் சரவணப்பெருமாள்), தமிழ்ச்செல்வி இராஜராஜன், சு. வெங்கட்ரமணி.
♦ லதாவின் படைப்புலகம் - சிங்கப்பூர் எழுத்தாளரும் கவிஞருமான லதாவுடன், அவரது படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடல். படைப்பாளரின், எழுத்தின் நோக்கம். அனைத்துலகத் தமிழ்த் தளத்தில், தமிழ்ப் புனைவுலகில் சிங்கப்பூரின் தரம், இடம். எழுத்தின் வெற்றிகரமான ஒழுங்கிற்கு தேவையான மெனக்கெடல். மெய்யும் கற்பனையும் அனைத்துலகப் பிரச்சினைகளுடன் படைப்பில் எதிரொளிக்கும் எதார்த்தம். எழுத்தும் எழுத்தாளரும் வாசிப்பால் அடையும் உச்சிதம். எழுத்தின்வழி தான் அடையும் சுதந்திரம் எனப் பல்வேறு செய்திகளை உணர்வாய், அனுபவக் கோவையாய், தன் படைப்பின்வழி மனம் திறக்கிறார் லதா.
நேரம்: மாலை மணி 6 - இரவு மணி 7.30
இம்மூன்று நிகழ்ச்சிகளையும் வழிநடத்துகிறார் சிங்கப்பூர் எழுத்தாளரும் கவிஞருமான நெப்போலியன். புல்லாங்குழல் இசையும் கானமும் - நெ.ரெமிலா.
இம்மூன்று நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இலவசம்.

