அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் ஒருவருக்கு இதயச் செயலிழப்பு, பக்கவாதம் ஏற்பட அல்லது இதயச் செயலிழப்பால் உயிர் இழக்க மிகுந்த அபாயம் இருக்கிறதா என்பதைக் கணிக்கவல்ல புதுவகை இரத்தப் பரிசோதனை முறையை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
அந்தப் புதுவகைப் பரிசோதனையின் மூலம் புரதங்களையும் 'மெஷின் லேனிங்' தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி, 27 புரத மாதிரி பெறப்படும். அதன்மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளில் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதைக் கணிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் கொலராடோவை மையமாகக் கொண்ட 'சோமாலாஜிக்' நிறுவனத்தின் ஆய்வாளர்கள் குழு இந்தப் புதுவகை இரத்தப் பரிசோதனை முறையை உருவாக்கி இருக்கிறது.
இந்தப் பரிசோதனை இரத்தத்தில் உள்ள புரதங்களை அளவிடுவதைச் சார்ந்துள்ளது. நடப்பிலுள்ள பரிசோதனை முறைகளைக் காட்டிலும் புது முறை கிட்டத்தட்ட இருமடங்கு துல்லியமான முடிவுகளைக் காட்டுகிறது.
'சயின்ஸ் டிரான்ஸ்லேஷனல் மெடிசின்' எனும் மருத்துவ சஞ்சிகையில் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 22,849 பேரிடம் இருந்து பெறப்பட்ட இரத்த பிளாஸ்மா மாதிரிகளில் உள்ள 5,000 புரதங்களை 'மெஷின் லேனிங்' தொழில்நுட்பத்தின் துணையுடன் ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.
அவற்றில் மாரடைப்பு, பக்கவாதம், இதயச் செயலிழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பிருப்பதைக் கணிக்கவல்ல 27 புரதங்களை அவர்கள் அடையாளம் கண்டனர்.
பின்னர் இந்தப் புதுவகை இரத்தப் பரிசோதனை முறை 11,000 பேரிடம் சோதித்துப் பார்க்கப்பட்டது. ஏற்கெனவே மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களிடத்திலும் இம்முறையால் திரும்பவும் அவற்றால் பாதிக்கப்படும் அபாயமுள்ளதா என மதிப்பிட இயலும் என்றும் கூறப்பட்டது.
முன்கூட்டியே நோய் அபாயத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதால் சிறந்த சிகிச்சை உத்தியைக் கண்டறிந்து, சிகிச்சை வழங்க இம்முறை வழிவகுக்கும்.
இப்போது அமெரிக்காவில் நான்கு சுகாதாரப் பராமரிப்பு மையங்களில் இந்தப் புதிய இரத்தப் பரிசோதனை முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் இங்கிலாந்தும் இம்முறையை ஏற்றுக்கொள்ளும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
"ஒருவருக்கு மேம்பட்ட சிகிச்சை தேவைப்படுமா, அப்படி ஒருவருக்குச் சிகிச்சை அளித்தபின், அது உண்மையிலேயே வேலை செய்கிறதா எனும் கேள்விகளுக்கு எல்லாம் விடையளிக்க இயலும் எனக் கருதுகிறேன்," என்றார் ஆய்வுக்குழுவின் தலைவர் டாக்டர் ஸ்டீஃபன் வில்லியம்ஸ்.
இதயப் பிரச்சினை ஏற்பட யாருக்கு அதிக அபாயமுள்ளது, யாருக்குக் குறைந்த அபாயமுள்ளது என வகைப்படுத்த முடியும் என்பதுடன், அடுத்த நான்கு ஆண்டுகளில் இதய நோயால் பாதிக்கப்பட எத்தனை விழுக்காடு வாய்ப்புள்ளது என்பதையும் இந்தப் புதுவகை இரத்தப் பரிசோதனை முறை காட்டிவிடும். இந்தப் புதிய முறை இதய மருத்துவத்தில் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

