ஹர்ஷிதா பாலாஜி
தமிழைப் படிப்பதால் என்ன பயன் இருக்கின்றது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சங்கம் சென்ற வெள்ளிக்கிழமைஅன்று 'முத்துச்சிதறல்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
'தமிழோடு உயர்வோம்' என்ற கருப்பொருளில் நிகழ்ச்சி அமைந்த தாகத் தெரிவித்தார் சங்கத்தின் தலைவர் திரு. தி. ஜோதிநாதன்.
உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப்பள்ளி இயங்கிய காலத்தில் அங்கு படித்த நால்வர் தங்கள் அனுபவங்களையும் அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்களையும் பகிர்ந்துகொண்டனர்.
திரு. கோ. செல்வராஜூ, அரசாங்கத்துறையில் 50 ஆண்டுகள் பணியாற்றி துணைத்தூதர் பதவி வரை உயர்ந்ததை பற்றியும் தூதராக இருந்தபோது தமிழ் மொழி தனக்கு உதவியது பற்றியும் பகிர்ந்துகொண்டார்.
திருமதி மீனாட்சி சபாபதி தன் வாழ்நாளில் எந்த அளவிற்கு தமிழ் மொழி உதவியிருக்கிறது என்றும் தான் வானொலியில் படைத்த நிகழ்ச்சிகள் மூலமாக உலகளவில் பாராட்டுகளைப் பெற்றதாகவும் அவையோரிடம் பகிர்ந்துகொண்டார்.
திரு. சி. குணசேகரன், தான் ஈடுபட்டு வந்த மற்றும் தற்போது நடத்தும் தொழிலுக்குத் தமிழ் முதன்மையாக விளங்குவது குறித்துப் பேசினார்.
தமிழில் பல மின்னிலக்கப் படைப்புகளை உருவாக்கி, பொருளீட்டி வருவதை பற்றியும் அவர் விளக்கிக் கூறினார்.
திரு. கா.முருகையன், அரசாங்கம், தனியார் துறை எனப் பல அமைப்புகளில் பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு தற்போது சொந்த நிறுவனம் அமைத்து செயல்படுவதாகவும் தான் கற்ற தமிழ்மொழி தனக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்ததென்றும் தெரிவித்தார்.
ஆகையால், அனைவரும் தாங்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறியதற்கு தமிழ் மொழிக் கல்வி எந்தவகையிலும் இடையூறாக அமையவில்லை என்றும் மாறாக அது அடிப்படையை வகுத்துக் கொடுத்துள்ளது என்றும் உறுதியுடன் கூறினார்கள்.
மோண்டிசோரி நிறுவனத்தின் தலைவரும், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் துணைத்தலைவரும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக சபையின் தலைவருமான டாக்டர் சந்துரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தமது உரையில் டாக்டர் சந்துரு உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப்பள்ளியில் கல்வி கற்ற முன்னாள் மாணவர்கள் பல துறைகளில் மேம்பட்ட நிலையில் இருப்பதை எடுத்துக்கூறினார்.
அத்துடன், அவர்களிடம் இயற்கையாக அமைந்துள்ள தமிழ் மொழிப் பற்றும் ஆர்வமும் தமிழ் மொழியினை சிங்கையில் என்றுமே வாழும் மொழியாக வைத்திருக்கவேண்டும் என்ற அக்கறை மேலோங்கி இருப்பதைக் காட்டுவதா கவும் டாக்டர் சந்துரு தெரிவித்தார்.
நான்கு முன்னாள் மாணவர்களின் உரைகளுக்குப் பிறகு, முன்னாள் மாணவர்கள் சிலர் பற்றிய குறிப்புகள் இடம்பெறும் முத்துச்சிதறல் நினைவு மலர் வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினர் டாக்டர் சந்துரு நூலை வெளியிட்டார்.
முதல் நூலை சங்கத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய ஆலோசகருமான திரு. பொன் சுந்தரராசு பெற்றுக்கொண்டார்.

