ஹர்ஷிதா பாலாஜி
சித்திரைப் புத்தாண்டு, 'வைசாக்கி' எனும் சீக்கியப் புத்தாண்டு, 'சொங்க்ரான்' எனப்படும் தாய்லாந்து மக்களின் புத்தாண்டு, 'பி மாய்' எனும் பர்மியப் புத்தாண்டு முதலிய பல புத்தாண்டுகளும் இந்த ஏப்ரல் மாதத்தில் கொண் டாடப்படுகின்றன.
இப்படி புத்தாண்டுகள் அடுத்தடுத்து ெகாண்டாடப்படுவது என்பது தற்செயலாக நடக்கும் செயல் அல்ல.
மேற்குறிப்பிடப்பட்ட வெவ்வேறு இனங்களின் புத்தாண்டுகளும் ஒரே நேரத்தில் இடம்பெறுவதற்கான முக்கிய காரணம் அவை பயன்படுத்தும் சூரிய நாள்காட்டி.
சூரியனைச் சுற்றி பூமி எவ்வாறு சுழல்கிறது என்பதைக் கணித்து அதன் அடிப்படையில் காலத்தை கணக்கிட்டு இந்தச் சூரிய நாள்காட்டி உருவாக்கப்பட்டது.
பல இனங்களையும் சமயங்களையும் இணைக்கும் இந்த நாள்காட்டியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இதுபோன்ற கலாசாரங்களைப் பற்றி மக்கள் பலரும் மேலும் தெரிந்துகொள்ளவும் 'ஹாவ் பார் வில்லா' பூங்கா, 'ஜர்னீஸ்' நிறுவனத்துடன் இணைந்து 'சோலார் நியூ இயர்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சியில் இந்து, சீக்கிய மத குருமார்களும் இரு புத்த பிக்குகளும் தங்கள் நல்லாசிகளை வழங்க அழைக்கப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து 'பங்க்ரா' நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. அத்துடன், இந்நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக சூரிய நாள்காட்டி பற்றியும் அதைப் பின்பற்றும் கலாசாரங்கள் குறித்தும் பொதுமக்கள் மேலும் தெரிந்துகொள்ள ஏதுவாக 13 பதாகைகள் பூங்காவைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இப்பதாகைகள் மே மாதம் முழுவதும் பூங்காவில் இடம்பெற்று இருக்கும்.
சூரிய நாள்காட்டியைப் பயன்படுத்தி புத்தாண்டை அண்மையில் கொண்டாடிய அனைவருக்குமான மின்வாழ்த்து அட்டைகளையும் 'ஹாவ் பார் வில்லா' பூங்கா இந்நிகழ்ச்சிக்காகத் தயாரித்தது.
இந்த அட்டைகளை 'ஹாவ் பார் வில்லா' பூங்காவின் இணையத்தளம் வழி பதிவிறக்கம் செய்யலாம்.

