காலையில் ராஜாவைப் போலவும் மதிய உணவை ஒரு அமைச்சரைப் போலவும் இரவு உணவை ஒன்றும் இல்லாத ஏழையைப் போலவும் சாப்பிட வேண்டும் என்னும் பொன்மொழிக்குள் ஆரோக்கியம் குறித்த அத்தனை விவரங்களையும் அடக்கிவிட்டனர் நம் முன்னோர்கள்.-
காலையில் எல்லாச் சத்துகளும் நிரம்பிய தானியங்கள், பழங்கள், காய்கறிகள் கலந்த உணவைச் சாப்பிடவேண்டும். மதிய வேளையில் நிறைய காய்கறிகள், குறைந்த அளவில் சோறு, இரவில் எளிதில் செரிமானமாகக் கூடிய எளிதான உணவை மிகக் குறைவான அளவில் சாப்பிட வேண்டும் என்பதே இதன் பொருள்.
இதற்குமாறாக காலையில் எதுவும் சாப்பிடாமல், ஒரு நாளை ஆரம்பிக்கிறோம்.
காலையில் சாப்பிடும் உணவுதான் நாள் முழுவதும் ஒருவரை சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட வைக்கிறது. அத்துடன், மூளை, தசை, எலும்பு, செரிமான மண்டலத்துக்குத் தேவையான சக்தியையும் அளிக்கிறது என்பதால், காலை உணவைத் தவிர்க்கக்கூடாது என்பதே ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
ஆனால், நேரமின்மையால் பலரும் காலை உணவைத் தவிர்த்து விடுகின்றனர். பெரும்பாலானோர் ஒரு குவளை தேநீர், காபியோடு காலை உணவை முடித்துக்கொள் கிறார்கள். இந்த அணுகுமுறை நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு உலை வைத்துவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இரவு உணவு உண்டபிறகு எட்டு மணி நேரங்களுக்கு மேலாக உணவின்றி நீண்ட இடைவெளி விடப்படுவதால், உடலுக்குத் தேவையான சக்தியைப் பெற காலையில் சத்தான உணவைச் சாப்பிடுவது அவசியம்.
தவறான கற்பனை
உணவைத் தவிர்த்தால் உடல் எடையைக் குறைக்கலாம் என்று நினைப்பது பெரும் தவறு. இது ஒரு தவறான கற்பனை.
காலை உணவை தவிர்க்கும் போது உடலில் பசிக்கான ஹார்மோன் அதிகமாகத் தூண்டப்படுகிறது. இதனால் மதிய உணவை அதிகளவில் எடுத்துக்கொள்ள நேரிடும். இது உடல் எடையை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
இரவில் பணிபுரிபவர்களும் வீட்டுக்கு வந்ததும் தூங்கி விடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், இவர்களும் காலை உணவு எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கக் கூடாது.
ஆய்வுகள் எச்சரிக்கை
அண்மைய ஆய்வறிக்கையின் படி, காலை உணவைத் தவிர்க்கும் பழக்கமானது டிமென்ஷியா என்ற மறதி நோயை உருவாக்கும் அபாயத்தை நான்கு மடங்கு அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள் ஜப்பானிய இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
முழுதானிய உணவு, விதைகள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சிகாேகாவின் ரஷ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
காலை உணவை தவிர்ப்பதன் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அதிகரித்து, நீரிழிவு நோய் வர 20% அதிக வாய்ப்புள்ளதாகவும் மற்றொரு தகவல் சுட்டிக்காட்டி யுள்ளது.
சாப்பிடுவதும் தவிர்ப்பதும்
காலை உணவில் சிலவற்றை சேர்த்துக்கொள்வதும் தவிர்ப்பதும் உடல் நலத்திற்கு நல்லது.
காலை உணவில் பழச்சாறு அருந்துவது பலருக்கும் எளிதாக உள்ளது. இதனைத் தவிர்த்து பழங்களை வெட்டி சில துண்டுகள் காலை உணவில் எடுத்துக்கொள்வது நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் கிடைக்கச்செய்யும். காய்கறிச் சாறும் பருகலாம்.
ஓட்ஸ் உடனடி சக்தியும் நீண்ட நேர சக்தியும் கொடுக்கக்கூடியது. நார்ச்சத்து கொண்டது. அதனால் வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். செரிமானம் சீராய் இருக்கும்.
முட்டை சிறந்த புரதம், நல்ல கொழுப்புச் சத்து கொண்டது. காலை உணவிற்குச் சிறந்தது.
தர்பூசணி, பப்பாளிப் பழங்களும் நன்மை அளிக்கும்.
காலையில் தேநீர், காபி தவிர்ப்பது நல்லது. இதனைக் காலை உணவிற்குப் பிறகு எடுத்துக்கொள்ளலாம். ஆறு பாதாம் பருப்புகளைக் காலை உணவிற்கோ அல்லது 11 மணி உணவிற்கோ எடுத்துக்கொள்வது சிறந்த புரதச் சத்தை அளிக்கும். அதிகம் சர்க்கரை கலந்த உணவு, கேக் போன்ற வற்றை தவிர்த்துவிட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
தகவல்: டைம்ஸ் ஆஃப் இந்தியா, நியூஸ் 18 ஊடகங்கள்

