ஆ. விஷ்ணு வர்தினி
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாணவ சாரணியர்கள் மீண்டும் நேரடி தொண்டூழியப் பணிக்குத் திரும்பியுள்ளனர். சிங்கப்பூர் சாரணியர் அமைப்பின் 'கேம்ப் கிரிஸ்டீன்' முகாம் அதற்கான வாய்ப்புகளை அளித்து வருகின்றது.
கொவிட்-19 நோய்ப்பரவலால் முடங்கியிருந்த கேம்ப் கிரிஸ்டீன் சாரணியர்களின் முகாம்கள் முழுமையாகத் திறப்பதற்கு முன்னர், புதுப்பிப்புப் பணிகளில் இறங்கினர் ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த சாரணியர் படைகள். அலங்கார கார் சக்கரங்களுக்கு வண்ணம் பூசுதல், தோட்டவேலை ஆகியவற்றில் மூன்று நாட்களாக மும்முரமாக ஈடுபட்டிருந்தனர் நூற்றுக்கும் மேற்பட்ட சாரணியர் (படம்).
தொண்டூழியப் பணியில் ஈடுபட்டிருந்த மாணவி ச. ருத்தரதாரணி, "சமூகப் பணியில் அதிக மனநிறைவு இருக்கிறது என்பதை சாரணியர் படை எனக்கு உணர்த்தியுள்ளது. தொடர்ந்து சமூகத்துக்குப் பங்காற்ற வேண்டும் என்ற உறுதியை இது என்னுள் விதைத்துள்ளது," என்றார். பூச்சூன் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை மூன்றில் பயிலும் அவர், மூன்றாண்டு காலமாக சாரணியர் படையில் இயங்கி வருகின்றார்.
ஸ்ரீ நாராயண மிஷனில் மூத்தோருக்காக தொண்டூழியப் பணி செய்வதோடு, பள்ளித் துப்புரவாளர்கள், உணவுக் கடைக்காரர்கள் முதலியோருக்கு நன்றி கூறும் பல முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளனர் ஃபூச்சூன் உயர்நிலைப் பள்ளியின் பெண் சாரணர்கள்.
விளையாட்டு, கலை என பல்வேறு இணைப்பாட நடவடிக்கைகளுக்கிடையே, சாரணியர் படையைப் பல மாணவிகள் தேர்ந்தெடுப்பதுண்டு. பள்ளியில் தொடங்கிய இந்த தொண்டூழியப் பயணத்தை தனிப்பட்ட முறையில் விரிவுபடுத்த எண்ணி, தத்தம் வட்டாரங்களில் சமூக அமைப்புகளிலும் சமூகப் பணியாற்றி வருவதாக மாணவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
ஃபூச்சூன் உயர்நிலைப் பள்ளியில் வேதியியல், கணினிப் பயன்பாட்டு ஆசிரியராகவும், சாரணியர் படையை மேற்பார்வையிடுபவராகவும் பணியாற்றி வரும் திருமதி ஷ.சுகந்தி, தொடக்கப்பள்ளியிலிருந்தே சாரணியராக இயங்கி வந்தவர். அந்த அனுபவங்கள் முழுமையானதொரு மனிதராக தன்னை உருமாற்றியுள்ளதை அவர் நினைவுகூர்ந்தார்.
சமூகத்துக்காக உழைப்பதே சாரணியர்களின் நோக்கமாக இருந்து வந்துள்ளது.
நேரடித் தொடர்பினைத் துண்டித்த கொவிட்-19 சூழலிலும், உதவி தேவைப்படுவோருடன் தொடர்புகொண்டு மின்னிலக்க முறையில் உதவியதும், சுய மேம்பாட்டுக்காக மெய்நிகர் முகாம்களில் கலந்துகொண்டதும் சாரணியர்களைத் துடிப்பாக வைத்திருந்ததாகக் கூறினார் திருமதி சுகந்தி.
சிங்கப்பூர் சாரணியர் அமைப்பைப் பற்றி மேலும் அறிய: https://girlguides.org.sg/# தளத்தை நாடலாம்.

