மூத்த எழுத்தாளரும் நாடக ஆசிரியருமான திரு. ராம். நாராயண சாமிக்கு இவ்வாண்டு தமிழவேள் விருது வழங்கிச் சிறப்பித்திருக்கிறது சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்.
இம்மாதம் 23ஆம் தேதி இணையத்தில் 'ஸூம்' வழி நடைபெற்ற முத்தமிழ் விழாவிற்கு முன்னதாக 17ஆம் தேதி விருது வழங்கும் நிகழ்வு நேரடியாக நடைபெற்றது.
எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பனும் செயலாளர் திருவாட்டி கிருத்திகாவும் உடனிருக்க சிறப்பு விருந்தினரும் புக்கிட் தீமா தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. முரளி பிள்ளை விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.
அத்துடன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் 17ஆம் தேதி பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.
பாலர் பள்ளி, தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குத் திரு. முரளி பிள்ளை பரிசுகளை வழங்கினார்.
வளர் தமிழ் இயக்கத்தின் தற்போதைய மதியுரைஞரும் மேனாள் தலைவருமான திரு.ஆர். ராஜாராம், உயர்நிலை, தொடக்கக்கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.
பரிசளிப்பு நிகழ்வுகள் அனைத்தும் காணொளிகளாகப் பதிவு செய்யப்பட்டு 23ஆம் தேதி இணையத்தில் விழா இடம்பெற்றபோது ஒளிபரப்பப்பட்டன.
கண்கவர் நடனத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், மாறுவேடப் போட்டிகளில் முதல் மூன்று நிலைகளில் வெற்றிபெற்றவர்களின் நடிப்புத் திறன், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான கதை சொல்லும் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவியின் கதை சொல்லும் திறன், பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவியின் பேச்சுத் திறன் ஆகியவை நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்புச் சேர்த்தன.
கல்வி அமைச்சின் தமிழ் மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவின் ஏற்பாட்டில் வளர் தமிழ் இயக்கத்தின் ஒருங்கிணைப்புடன் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ் மொழி விழாவின் ஒரு பகுதியாக முத்தமிழ் விழா நடைபெற்று வருகிறது.
சிங்கப்பூரின் இளம் பேச்சாளர்கள் இருவர் சிறப்புரை ஆற்றினர். இணையப் பாதுகாப்புப் பொறியாளரும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் மேனாள் தலைவருமான திரு. அருள் ஓஸ்வின் 'தமிழும் இளையரும்' எனும் தலைப்பில் உரையாற்றினார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத் தலைவி செல்வி மிருதுளா குமார் 'தமிழும் தொழில்நுட்பமும்' எனும் தலைப்பில் உரையாற்றினார். இருவரது உரையும் அனைவராலும் வரவேற்கப்பட்டது.

