சென்ற ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர் தினத்தில் மக்கள் கவிஞர் மன்றத்தின் 18ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா 'யூடியூப்பில்' நேரலையாகவும் மன்றத்தின் 'மக்கள் கவிஞர் மன்றம்' என்ற ஃபேஸ்புக் பக்கம் வாயிலாகவும் நடைபெற்றது (படம்).
மாணவர் ரோஷன் பரத்வாஜின் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் மன்றத் தலைவர் புவனேஸ்வரி மகேந்திரன் தலைமையுரை ஆற்றினார்.
சிங்கப்பூர் தேசியக் கல்விக் கழகத்தின் தமிழ்மொழி பண்பாட்டுத் துறைத் தலைவர் முனைவர் சீதாலட்சுமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மக்கள் கவிஞரைப் பற்றியும் அவரது பாடல் வரிகளில் உள்ள சமூக விழிப்புணர்வுக் கருத்துகளையும் சுட்டிக் காட்டினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் செம்மலர் மாத இதழின் துணையாசிரியருமான, வழக்கறிஞர் த. ஜீவலட்சுமி 'பாட்டாளி வர்க்கப் பார்வையில் பெண்ணியம்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
மே தின வரலாற்றை நினைவு கூர்ந்த அவர் இன்றைய சமூகத்தில் பெண்களின் நிலையைப் பற்றி விளக்கிப் பேசினார்.
சிறப்பு அங்கமாக முனைவர் மன்னை க. இராஜகோபாலன் தலைமையில் ' காலமிருக்குது பின்னே' என்ற தலைப்பில் இசையரங்கம் நடைபெற்றது.
மாணவர்கள் சமிக்ஷா கிரிஷ், சஹானா கிரிஷ், அதிதி சுரேஷ், அக்ஷைனி தனபாலன், ரோஷன் பரத்வாஜ்ம, இரகு ஸ்ரீராம் ஆகியோர் மக்கள் கவிஞரின் புகழ்பெற்ற சில பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடினர்.
நிகழ்ச்சியை "இனிக்கும் இலக்கியம்" எனும் தலைப்பில் 'யூடியூப்' வழியாகவும் 'மக்கள் கவிஞர் மன்றம்' என்கிற ஃபேஸ்புக் பக்கத்திலும் காணலாம்.
செய்தி, படம்: ஏற்பாட்டுக் குழு