மோனலிசா
நாளை அன்னையர் தினத்தை முன்னிட்டு பாசிர் ரிஸ் கிரஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை ஒன்றில் பயிலும் லேக்ஷ்த்ரா குமரேசன், 13, தன் அம்மாவுக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்து அட்டையும் கொடுக்கவிருக்கிறார். அன்று அம்மாவுக்குப் பிடித்தமான சிற்றுண்டியையும் சமைத்து தர திட்டமிட்டிருக்கிறார்.
தமது அன்னைக்கே ஆச்சரியம் ஊட்டும் வகையில் இதற்கு முன்னர் அவர் செய்திராத சமையல் வேலையில் தன் கைவண்ணத்தைக் காட்ட முடிவெடுத்துள்ளார் லேக்ஷ்த்ரா.
பரிசுப் பொருள் வாங்கி தன் அம்மாவை மகிழ்விப்பதைவிடவும் சுயமாகப் புதியதொரு முயற்சியில் ஈடுபட்டு அதில் அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்வதில் அவர் பெருமிதம் கொள்கிறார்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் அன்னையருக்காகப் பரிசு வாங்க மறந்தவர்களுக்கு லேக்ஷ்த்ராவைப் போல வீட்டிலிருந்தபடியே கடைசி நேரத்தில் சில ஏற்பாடுகளைச் செய்யமுடியும்.
"ஆண்டு முழுவதும் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் நமக்காக உழைக்கும் அம்மாவிற்கு ஒரு நாள் முழுவதுமாக விடுப்பு வழங்கலாம்.
"அம்மாவிற்கு ஓய்வு வழங்கிவிட்டு வீட்டு வேலைகள் அனைத்தையும் குடும்பத்தில் உள்ள அனைவரும் பகிர்ந்து செய்யலாம்.
"அவருக்குப் பிடித்தமான உணவை சமைத்துப் பரிமாறலாம். சமைக்க முடியாதவர்கள் அவரின் விருப்ப உணவை வீட்டிற்கே வரவழைத்து மகிழ்விக்கலாம்," என்றார் லேக்ஷ்த்ரா.
"இன்று ஒரு நாள் மட்டும் வேலை செய்வீர்கள். அதன்பிறகு எல்லாவற்றையும் மறந்துவிடு வீர்கள்," என்று சொல்லும் அம்மாக்களுக்கு இன்று முதல் ஏதேனும் ஒரு சிறிய உதவியைச் செய்ய முன்வரலாம்.
உதாரணமாக காலையில் காபி போடுவது, செடிகளுக்கு நீர் ஊற்றுவது, துணிகளை மடித்து வைப்பது, இஸ்திரி போடுவது உள்ளிட்ட வேலைகளில் ஏதேனும் ஒரு சிறு பங்கை தினமும் செய்ய ஆரம்பிக்கலாம் என்றும் அவரது நண்பர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
அம்மாவுக்கு கைப்பட எழுதிய ஒரு கடிதம் அல்லது வாழ்த்து அட்டை வழங்கலாம். அம்மாவைப் பற்றி சில நிமிட காணொளி ஒன்றைத் தயாரித்து அனுப்பலாம். அவருடன் எடுத்த மனதிற்கு நெருக்கமான புகைப்படங்களை வைத்து ஒரு புகைப்படத்தொகுப்பு (Photo Collage) செய்து அனுப்பலாம்.
தாயைப் பிரிந்து வெளியூர் அல்லது வெளிநாட்டில் வசிப்பவர்கள் எளிதாக இவற்றைச் செய்ய இயலும்.
ஒவ்வோர் ஆண்டும் அன்னையர் தினம் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் அன்றைய முழு பொழுதையும் அம்மாவுடன் மகிழ்ச்சியாக கழிக்கலாம்.
தற்போது கொவிட்-19 விதிமுறைகள் தளர்த்தப்பட்ட நிலையில் அவருடன் கோவில், உணவகம், கடைத்தெரு, திரைப்படம் போன்ற இடங்கள் அல்லது பிற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லலாம்.
இவற்றுடன் மட்டுமல்லாமல், அவருக்குப் பிடித்த விஷயத்தில், ஒரு நாள் வகுப்புக்கு அல்லது பயிலரங்குக்கு ஏற்பாடு செய்து அனுப்பலாம்.
அவருடைய நெருங்கிய நண்பர்களுடன் வெளியில் சென்று இளைப்பாற ஏற்பாடு செய்யலாம்.
இதுகுறித்து இந்தியர்களுக்கான தொண்டு நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணிபுரியும் திருவாட்டி கங்காதேவி முத்துசாமி, 42, கூறியபோது, "நான் என் அம்மாவுக்கும் மாமியாருக்கும் அன்னையர் தினத்தன்று வழக்கமாக அவர்களுக்குப் பிடித்தமான புடவை, கைப்பை, காலணிகள் போன்ற உபயோகமான பொருள்களை வாங்கித் தருவேன். அவர்களை இரவு உணவிற்கு நல்ல உணவகத்திற்கு அழைத்துச் செல்வேன்.
"இந்த வருடம் நான் அவர்களை முகம், கை, கால் ஒப்பனைகளுக்காக அழகு நிலையத்துக்கும் உடற்பிடிப்பு சிகிச்சைக்கும் அழைத்துச் செல்வதற்கும் திட்டமிட்டிருக்கிறேன்.
"வேலைக்குச் செல்லும் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் பெரிய அரவணைப்பாக இருக்கும் இவர்கள் நிச்சயம் இதனை விரும்புவார்கள் என்று நினைக்கிறேன்," என்று உற்சாகமாகக் கூறினார்.
அம்மாக்கள் அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

