ஹர்ஷிதா பாலாஜி
சிங்கப்பூர் தமிழ் இளையர்களின் பலவித திறமைகளை வெளிப்படுத்தவும் தமிழ் பண்பாடு, மரபு, கதைகள் போன்றவற்றை அங்கீகரிக்கவும் 'தமிழின் ஏழு அதிசயங்கள்' என்ற இசை நிகழ்ச்சிக்கு பிரம்மாஸ்த்ரா இசைக்குழு ஏற்பாடு செய்திருந்தது.
கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி, சனிக்கிழமையன்று தேசிய நூலக நாடக அரங்கத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
தினேஷ் செல்வராஜ், சொக்கலிங்கம் அரவிந்த், அஷ்வினி செல்வராஜ் போன்ற உள்ளூர் கவிஞர்கள், சந்தியா குமார் போன்ற புதிய பாடலாசிரியர்கள் எழுதிய வரிகளுக்கு பிரம்மாஸ்த்ரா இசைக் குழுவின் இசையமைப்பாளர் நிரஞ்சன் பாண்டியன் இசையமைத்தார்.
பிரபல உள்ளூர் பாடகர்களான சாய் விக்னேஷ், நந்தித்தா குருநாத் ஹரி, மாதவன் மணிமாறன், புனிதா ஆறுமுகம், மீனாக்ஷி ஜ்யோத்திஷ் ஆகியோர் பாடல்களைப் பாடினார்கள்.
'தமிழே' என்ற பாடல் தொகுப்பிலிருந்து ஐந்து பாடல்களும் நிரஞ்சன் பாண்டியனின் மற்ற சில பாடல் தொகுப்பிலிருந்து ஐந்து பாடல்களும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
இளையர்களுக்குப் பிடிக்கும் விதத்தில் பாரம்பரிய இசையுடன் 'ஃபன்க்' (Funk) போன்ற இசை வகைகளைக் கலந்து இசையமைத்திருந்தார் நிரஞ்சன் பாண்டியன்.
மேலும், பாடகர்கள் மேடையில் பாடும்போது பின்னணியில் திரையிடப்பட்ட கண்கவர் காணொளிகளை உருவாக்கியிருந்தார் வசந்தகுமார் அன்பழகன்.
குறிப்பாக, நிகழ்ச்சியை நிறைவு செய்த பாடலாக சொக்கலிங்கம் அரவிந்த் எழுதி, நிரஞ்சன் பாண்டியன் இசையமைத்த 'எனது தமிழே' என்ற பாடல் அமைந்தது.
இப்பாடலை நிகழ்ச்சியில் பாடிய அனைத்து பாடகர்களுடன் பிரபல பின்னணிப் பாடகர் ஹரிசரன் சேஷாத்ரியும் காணொளி வழியாகப் பாடினார்.
நைனா முஹம்மது மற்றும் மகன்களின் ஆதரவில் 'எனது தமிழே' என்ற பாடலின் காணொளி உருவாக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்புரை வழங்கிய சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன், தமிழ்மொழியின் எதிர்காலம் இளையர்களின் கைகளில் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறி பிரம்மாஸ்த்ரா இசைக்குழுவின் முயற்சிகளைப் பாராட்டினார்.
"தமிழின் பெருமைக்குரிய கார ணங்களையும் தாண்டி காலங்காலமாக கட்டிக்காக்கப்படும் மரபு எவ்வாறு தொடர்ந்து காலத்தின் மாற்றத்திற்கேற்ப மாறி வருகின்றது என்பதையும் சவால்மிக்க காலங்களில் எவ்வாறு நம் மரபு நம் அடையாளமாகக்கூட விளங்குகிறது என்பதையும் வெளிக்கொணர நான் 'அள்ள அள்ள' என்ற கவிதையை எழுதினேன்," என்றார் அஷ்வினி செல்வராஜ்.
"இசையை ஒரு மாதத்திற்கு முன்பாகவே இயற்றி, பாடகர்களைப் பாடவைத்து, அப்பாடல்களை இசைத் தொகுப்பாக தொகுத்து வெளியிட்டு, இறுதியில் ஒரு மேடை நிகழ்ச்சியை அரங்கேற்ற ஒரு சிறு குழுவாக இணைந்து நாங்கள் கடினமாக உழைத்தோம்.
"ஆகையால், இன்று எங்களுக்கு ஆதரவளித்தது போல் தொடர்ந்து எங்களுக்கும் சிங்கப்பூரிலுள்ள கலை சமுதாயத்துக்கும் பலரும் தங்களது ஆதரவை அளிக்கவேண்டும்," என்றார் பிரம்மாஸ்த்ரா குழுவின் நிரஞ்சன் பாண்டியன்.

