மும்பை: இந்திய பிரிமியர் லீக் (இபிஎல்) கிரிக்கெட் போட்டி 'பிளே ஆஃப்' சுற்றை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
இந்நிலையில், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. பூவா தலையாவில் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது.முதலில் பந்தடித்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ஓட்டங்கள் குவித்தது.
மும்பை அணி சார்பாக ரமன்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 194 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. ஆனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 190 ஓட்டங்கள்மட்டுமே எடுத்து மும்பை அணி தோல்வி அடைந்தது.
இதன்மூலம் ஹைதராபாத் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 போட்டியில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் எனும் பெருமை, சிறப்பாக விளையாடிய மும்பை வீரர் ஜஸ்பிரித் பும்ராவைச் சேரும்.

