ஜூன் விடுமுறைக்காலம் நெருங்கிவிட்டது! கொவிட்-19 கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டுவிட, கடந்த ஈராண்டுகளாக உல்லாசப் பயணம் மேற்கொள்ள முடியாதிருந்த நிலையும் மாறிவிட்டதால் பலரும் பயணம் செய்ய ஆவலுடன் காத்திருப்பர். இந்நிலையில், திட்டமிட்டு ஆயத்தமாவதன்மூலம் பயணத்தின்போது ஏற்பட வாய்ப்புள்ள சிரமங்களைத் தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம்.
நீண்ட காத்திருப்பு நேரம்
ஆவணங்கள் சரிபார்ப்பிற்காகவும் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் விமான நிலையத்தில் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கலாம்.
தற்பதிவு இயந்திரங்கள் (self check-in kiosk) மூலமாக பயணத்திற்கு முந்திய நடைமுறைகளை விரைந்து முடிக்கவும் இயலாது. ஏனெனில், கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழ், பயண உறுதிமொழி, கொவிட்-19 தொற்று இல்லை என்பதற்கான பரிசோதனை முடிவுகள் போன்ற ஆவணங்களைப் பதிவு முகவர்கள் (check-in agents) சரிபார்ப்பர்.
விமான நிறுவனங்களும் விமான சேவை நிறுவனங்களும் ஊழியர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன.
கடந்த மாதம் தென்கொரியாவில் இருந்து திரும்பியபோது பயணப் பதிவிற்காக இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்ததாகக் கூறினார் சுகாதாரப்பராமரிப்பு நிர்வாகியான சேமுவல் கோ. தமது விமானத்தின் புறப்பாட்டு நேரத்திற்கு இரண்டரை மணி நேரத்திற்கு முன்பே அவர் சோல் நகரின் இஞ்சியோன் விமான நிலையத்திற்குச் சென்றுவிட்டார்.
சிங்கப்பூரில் இருந்து தென்கொரியாவிற்குக் கிளம்பியபோது சாங்கி விமான நிலையத்தில் பயணப் பதிவு நடைமுறைகளுக்காக அவர் 45 நிமிடங்கள் காத்திருந்தார். கொவிட்-19 பரவலுக்கு முன்பிருந்த நிலைமையைக் காட்டிலும் இது 30 நிமிடங்கள் அதிகம் என்பது அவரது மதிப்பீடு.
கொவிட்-19 பரவலுக்குமுன் அனைத்துலக விமானம் எனில் இரண்டு மணி நேரம் முன்னதாகவும் உள்ளூர் விமானம் எனில் ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும் சென்றால் போதுமானது. ஆனால், இப்போது, விமான நிலையக் கடைகளில் ஏதேனும் பொருள் வாங்குவதாக இருந்தால் அல்லது ஜிஎஸ்டி திரும்பப் பெறுவதாக இருந்தால் இன்னும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே செல்வது நல்லது.
பயணப் பதிவு நடைமுறைகளை இணையம் வழியாகச் செய்துவிடலாம். அதன்வழியாக கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழ் அல்லது கொவிட்-19 தொற்று இல்லை என்பதற்கான பரிசோதனை முடிவுகள் போன்றவற்றைப் பதிவேற்றம் செய்துவிடலாம். இதனால் விமான நிலையத்தில் காத்திருப்பு நேரம் குறைவதுடன் எல்லா ஆவணங்களும் முறையாக உள்ளன என்ற மனநிம்மதியுடனும் இருக்கலாம்.
நிரம்பி வழியும் விமானங்கள்
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதைத் திட்டங்கள் கடந்த செப்டம்பரில் தொடங்கப்பட்டபோது, விமானங்களில் இருக்கைகள் முழுமையாக நிரம்பவில்லை. இதனால், நெருக்கடியின்றி விமானங்களில் பயணம் செய்ய முடிந்தது.
ஆனால், இப்போதெல்லாம் விமானங்களில் இருக்கைகள் முழுமையாக நிரம்பிவிடுவதால், இருக்கையின் கைதாங்கியில் வைக்கும்போது அருகிலுள்ள பயணியுடன் முழங்கை இடிக்க நேரிடலாம்.
பேங்காக், பாலி, ஆஸ்திரேலியா, தென்கொரியா போன்ற இடங்களுக்கான விமானங்கள், குறிப்பாக நீண்ட வாரயிறுதி போன்ற உச்சவேளைகளில், முழுமையாக நிரம்பிவிடுவதாகப் பயணிகளும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பணியாளர்களும் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.
ஜூன் விடுமுறையின்போது இதே நிலையை எதிர்பார்க்கலாம்.
ஐரோப்பாவிலும் வடஅமெரிக்காவிலும் கடந்த ஆண்டிலிருந்தே உள்நாட்டு விமானப் பயணம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. விமானங்கள் பெரும்பாலும் நிரம்பிவிடுகின்றன. முகக்கவச விதிமுறைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன.
ஜெட்புளூ, டெல்டா ஏர்லைன்ஸ் உள்ளிட்ட முக்கிய அமெரிக்க விமான சேவை நிறுவனங்கள், விமானப் பயணத்தின்போது முகக்கவசம் அணிவது பயணிகளின் விருப்பம் என்று கடந்த மாதம் அறிவித்துவிட்டன.
பிரான்ஸ், பிரிட்டன் போன்ற பல ஐரோப்பிய நாடுகளும் விமானம் உட்பட பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என்று அறிவித்துவிட்டன.
ஆனால், இத்தாலியில் விமானம் உட்பட பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
அதனால், பயணம் செய்யும் விமானம், செல்லும் நாடு போன்றவற்றில் முகக்கவச விதிமுறைகளை அறிந்து வைத்திருப்பது நல்லது.
அதேபோல், வார நாள்களில் பயணம் செய்தால் விமானக் கட்டணம் குறைவாக இருக்க அதிக வாய்ப்புண்டு.
காலை 5-7 மணிக்குள் அல்லது இரவு 9 மணிக்குப் பிறகு விமானம் கிளம்பினால் அருகிலுள்ள இருக்கை காலியாக இருக்கவும் வாய்ப்புண்டு.
குழந்தைகளை அழைத்துச் சென்றால் அவர்கள் சலிப்புற்றுவிடாமல் இருக்க தின்பண்டங்கள், விளையாட்டுப் பொருள்கள், புத்தகங்கள் போன்றவற்றை எடுத்துச்செல்வது நல்லது.
மாறுபட்ட விதிமுறைகள்
நாடுகளும் மாநிலங்களும் மாறுபட்ட கொவிட்-19 விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி இருக்கலாம்.
ஐரோப்பாவின் பல பகுதிகளும் வடஅமெரிக்காவும் கட்டாய முகக்கவச விதியை அகற்றிவிட்டன. ஆனாலும், சில கடைகளில் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிய வேண்டியிருக்கலாம்.
ஆஸ்திரேலியாவில் பொதுப் போக்குவரத்து போன்ற சில சூழல்களில் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதி நடப்பிலுள்ளது.
அதேபோல, சில நாடுகளிலும் மாநிலங்களிலும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றைக் காட்டினால் மட்டுமே உணவகங்கள், கடைகள், மன்றங்கள் போன்ற இடங்களுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படும்.
அதனால், வேறு நாடுகளுக்கு அல்லது நகரங்களுக்குச் செல்லுமுன் அங்கு நடப்பிலுள்ள கொவிட்-19 கட்டுப்பாடுகளை அதிகாரபூர்வ இணையத்தளம் மூலமாக அறிந்துகொள்ளுங்கள். இல்லாவிடில், எப்போதும் முகக்கவசம் அணிந்திருப்பது பாதுகாப்பானது.
எப்போதும் தடுப்பூசிச் சான்றிதழ் நகலை அல்லது மின்னிலக்கத் தடுப்பூசிச் சான்றிதழை வைத்திருப்பது நல்லது. அத்துடன், அது உங்களுடையதுதான் என்பதை உறுதிப்படுத்துவதற்கு அடையாள அட்டை போன்ற ஆவணத்தையும் வைத்திருங்கள்.
அதிகமான கார் வாடகை
கொவிட்-19 பரவலுக்குப் பிறகு கார் வாடகை அதிகரித்துவிட்டது. பலரும் பொதுப் போக்குவரத்தைத் தவிர்க்க விரும்புவதால் வாடகை கார்களுக்கான தேவையும் கூடிவிட்டது. விநியோகச் சங்கிலி இடையூறால் கார் பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில், இவ்வாண்டு மார்ச் முதல் செப்டம்பருக்கு இடையில், ஒருவர் வாடகை காரை நாடினால், அதற்கு 2019ல் இருந்ததைப்போல 50% முதல் 60% கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று பயண விவரத் தொகுப்பு நிறுவனமான 'கயாக்' தெரிவித்து உள்ளது.
அத்துடன், ரஷ்யா-உக்ரேன் சண்டை காரணமாக, இவ்வாண்டில் எரிபொருள் விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், வாடகை காரை நாடுவதற்குப் பதிலாக கார் பகிர்வு சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் செலவைக் குறைக்கலாம்.
முடிந்தால், எரிபொருள் செயல்திறன்மிக்க அல்லது எரிபொருளிலும் மின்சாரத்திலும் இயங்கும் கலப்பின கார்களை நாடலாம். அதேபோல், அமெரிக்காவிலும் கனடாவிலும் எரிபொருள் விலை வெவ்வேறு நகரங்களில், வெவ்வேறாக இருக்கலாம். கிட்டத்தட்ட 30% வரை ஏற்ற இறக்கமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
நீங்காத தொற்று அபாயம்
கொவிட்-19 பரவல் தணிந்துள்ளதேயன்றி, இன்னும் முழுமையாக அகலவில்லை. புதிது புதிதாக ஓமிக்ரான் துணைத் திரிபுகள் உருவெடுப்பதால், புதிய தொற்று அலையும் உருவாகலாம். அதனால், வெளிநாட்டுப் பயணத்தில் தொற்று அபாயம் இல்லாமல் இல்லை.
இந்நாள்களில் கொவிட்-19 தொற்று பெரும்பாலும் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதில்லை. ஆனாலும், அது உங்களது விடுமுறைப் பயணத் திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடலாம்.
அதனால், எப்போதும் முன்னெச்சரிக்கையுடனும் ஆயத்தமாகவும் இருப்பது சிறந்தது. விரைவுப் பரிசோதனைக் கருவிகள் (ஏஆர்டி), மருத்துவத் தரத்திலான முகக்கவசங்கள், காய்ச்சல், சளி போன்ற வற்றுக்கான மருந்து மாத்திரைகள் போன்றவற்றைக் கையில் வைத்து இருப்பது நல்லது.

