யுகேஷ் கண்ணன்
நிரந்தர உரிமைப் பத்திரம் என்பது சுயமாக முடிவு எடுக்கும் ஆற்றலை ஒருவர் இழக்கும் பட்சத்தில் அவர் சார்பாக முக்கிய முடிவுகள் எடுக்கும் உரிமையை இன்னொரு வருக்கும் கொடுக்கும் ஆவண மாகும். நிரந்தர உரிமைப் பத்திரத்தை ஒருவர் சுயமாக முடிவு எடுக்கும் ஆற்றல் இருக்கும்போதே செய்துவிட வேண்டும்.
இதற்கான பதிவு நிகழ்ச்சி இம்மாதம் 21ஆம் தேதி சனிக்கிழமை காலை நடைபெற்றது.
சிராங்கூன் சாலையில் உள்ள 'பிஜிபி' மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இந்து அறக்கட்டளை வாரியம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சிக்கு முன்பு, பிப்ரவரி 18ஆம் தேதியன்று சவுத் பிரிட்ஜ் சாலையில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்திலும் ஏப்ரல் 15ஆம் தேதியன்று சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திலும் நிரந்தர உரிமை பத்திரத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆலயத் தொண்டூழியர் களுக்காக உரைகள் நடத்தப் பட்டன. அவற்றுக்கும் இந்து அறக்கட்டளை வாரியம் ஏற்பாடு செய்திருந்தது. இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற உரைகளில் கலந்துகொண்டவர்கள் மட்டுமின்றி அதில் கலந்துகொள்ளாதவர்களும் இம்மாதம் 21ஆம் தேதியன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்தனர்.
சிங்கப்பூரில் நிரந்தர உரிமைப் பத்திரத்தைப் பதிவு செய்பவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாக பொதுக் காப்பாளர் அலுவலகம் கவலை தெரிவித்து, இந்து அறக்கட்டளை வாரியத்தின் உதவியை நாடியதாக வாரியத்தின் சேவா செயற்குழுவின் தலைவரும் வழக்கறிஞருமான திருமதி சுசீலா கணேசன், 51, தெரிவித்தார்.
கொவிட்-19 கிருமித்தொற்றின் நெருக்கடிநிலை காரணமாக இந்த முயற்சியை முன்பே தொடங்க முடியாமல் போனதாக அவர் கூறினார்.
"சுயமாக முடிவு எடுக்கும் ஆற்றலை இழக்கும் அபாயம் அனைத்து வயதினருக்கும் ஏற்படலாம். அத்தைய சூழல் ஒருவருக்கு ஏற்பட்டால் அவர் சார்பாக யார் முக்கிய முடிவுகளை எடுப்பது என்பது குறித்து குடும்ப உறுப்பினர்களிடையே இணக்கம் காண முடியாத நிலை ஏற்படுவதோடு மன உளைச்சலும் ஏற்படும்.
"மேலும், இப்பத்திரம் இல்லாவிட்டால், பாதிப்படைந்தோர் குடும்பத்தார் நீதிமன்றத்தில் மனநல ஆற்றல் சட்டத்தின்கீழ் முடிவுகள் எடுக்கும் உரிமையைப் பெற வேண்டும். அதற்கு சுமார் $6,000லிருந்து $12,000 வரை செலவாகலாம். அதனுடன் ஒப்பிடுகையில், நிரந்தர உரிமைப் பத்திரத்தின் பதிவு தற்போது சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இலவசமாக செய்து தரப்
படுகிறது," என அவர் கூறினார்.
நிகழ்ச்சிக்கு வந்து நிரந்தர உரிமைப் பத்திரத்தைப் பதிவு செய்துகொள்ள விரும்பியோருக்கு ஒன்பது வழக்கறிஞர்கள் அதற்கான அலுவல்களை இலவசமாகச் செய்து கொடுத்தனர். இந்த வழக்கறிஞர்கள் அனைவரும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தொண்டூழியர்கள் என்று திருமதி சுசீலா கூறினார்.
இப்பதிவு நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு த. ராஜசேகர், 60, தெரிவித்தார். தொண்டூழியம் புரிந்த வழக்கறிஞர்களுக்கு அவர் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த வழக்கறிஞர்களில் ஒருவரான திரு கந்தன் ராகவேந்திரா, 37, தனது நிபுணத்துவத்தை மக்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்த வேண்டு மென எண்ணியதால் இந்நிகழ்ச்சி யில் பங்கேற்றதாக கூறினார். இப்
பதிவு நிகழ்ச்சியில் பல குடும்பங்கள் கலந்துகொண்டதாகவும் நிரந்தர உரிமைப் பத்திரத்தின் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டு மேலும் பல இந்தியர்கள் இதுபோன்ற பதிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் சிறப்பாக இருக்குமெனத் தெரிவித்தார்.
தமது சகோதரி நிரந்தர உரிமைப் பத்திரத்தைப் பதிவு செய்யவில்லை என்றும் எதிர்பாராத வகையில் அவருக்கு மனநலப் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவரது குடும்பத்தில் பல பிரச்
சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமதி சுப்பிரமணி செல்லம், 70, தெரிவித்தார். அத்தகைய நிலை தமது குடும்பத்துக்கு ஏற்படக்கூடாது எனக் கருதி நிரந்தர உரிமைப் பத்திரத்தைப் பதிவு செய்துகொள்ள முடிவு எடுத்து நிகழ்ச்சிக்கு வந்ததாக அவர் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.
சுயமாக முடிவு எடுக்கும் திறனை தாம் ஒருவேளை இழந்தால் தமது சார்பாக முடிவுகளை எடுக்கும் உரிமையை தமது இரு மகள்களுக்கும் அவர் வழங்கி உள்ளார்.
தற்போது கொவிட்-19 சார்ந்த பாதுகாப்பு நடைமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால், பொது மக்களுக்கு இப்பத்திரத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூன் 12ஆம் தேதி மாரியம்மன் ஆலயத்தில் 250 பேர் வரை பங்கெடுக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்
பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, ஜூன் 26ஆம் தேதி அதே ஆலயத்தில் பத்திரத்தின் பதிவு நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் இவ்வுரையில் கலந்துகொண்டு நிரந்தர உரிமைப் பாத்திரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அதற்காக பதிவு செய்து கொள்ள வேண்டுமென இந்து அறக்கட்டளை வாரியம்
வலியுறுத்துகிறது.

