மாதங்கி இளங்கோவன்
மறைந்த உள்ளூர் பரதநாட்டியக் கலைஞரான சாந்தா பாஸ்கரின் முதல் முழு நாட்டிய நாடகமான 'பட்டர்ஃபிளை லவர்ஸ்' 64 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மேடையேறுகிறது.
'ரோமியோ-ஜூலியட்' காதல் கதையைப்போல துயரம் நிறைந்த காதல் காவியமான, பட்டர்ஃபிளை லவர்ஸ், சிங்கப்பூர் சீனக் கலாசார மையத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட விழாவின் ஓர் அங்கமாக அரங்கேறுகிறது.
பல கலாசாரங்கள், கலைகள், தலைமுறைகளுக்கிடையே பாலம் அமைக்கும் வகையில் விழாவின் படைப்பின் நிகழ்ச்சிகள் அமைகின்றன.
அந்த வகையில் சீனக் கதையை, இந்திய நடனத்தில் வழங்குகிறது 'பட்டர்ஃபிளை லவர்ஸ்'.
சீன ஆடைகள், இந்திய ஒப்பனை, சீனப் பாரம்பரிய நடனம்-பரதநாட்டிய அசைவுகளுடன் அமையும் இந்நடனத்துக்கு இந்தியாவின் பிரபல கலைஞர் ராஜ்குமார் பாரதியும் உள்ளூர் பிரபலம் நீல் சுவாவும் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.
சீன-இந்தியக் கலாசாரங்களை ஒன்றிணைக்கும் இந்த நாட்டிய நாடகம் அடுத்த மாதம் 3ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை, இரவு 8 மணிக்கு சிங்கப்பூர் சீன கலாசார மைய அரங்கத்தில் நடைபெறும்.
"இந்த நாட்டிய நாடகத்தின் நடன இயக்குநராகவும் நடனமணியாகவும் 1958ஆம் ஆண்டில் மேடையேறியவர் என் தாயார்.
"இன்று அவர் மறைந்துவிட்டாலும் அவருடைய வழிகாட்டலில் இந்தப் படைப்பை உருவாக்கியுள்ளேன்," என்றார் விருதுகள் பெற்ற கலைஞரும் சாந்தா-பாஸ்கர் தம்பதியின் மகளுமான மீனாட்சி பாஸ்கர்.
பெற்றோரின் பிரபல நாட்டிய நாடகமான 'பட்டர்ஃபிளை லவர்ஸ்' நாட்டிய நாடகத்தை பாஸ்கர்ஸ் கலைக் கழகத்தின் நடனமணிகளுடன் அவர்களுக்கு அர்ப்பணிக்கிறார் மீனாட்சி பாஸ்கர்.
சீனப் பாரம்பரிய நடன ஆசிரி
யரின் உதவியோடு அந்நடனத்தின் மகத்துவத்தைக் கற்றுக்கொண்டதாகவும் பாஸ்கர்ஸ் கலைக் கழகத்தின் நடனமணிகள் கூறியிருந்தனர்.
இப்படைப்பு சிங்கப்பூரின் பல்லின சமூகம் ஒற்றுமையாக கலையில் ஈடுபடும்போது பிறக்கும் புதுமையான சிந்தனைகளுக்கு நல்லதொரு
பிரதிபலிப்பாக அமைகின்றது என்றும் நம்புகின்றனர்.
'பட்டர்ஃபிளை லவர்ஸ்' நாட்டிய நாடகத்தின் கதாமாந்தர்களாக மேடையை அலங்கரிக்க இருக்கும் மாலினி பாஸ்கர் (இடது), சரண்யா ராமதாஸ்.
படம்: பாஸ்கர்ஸ் கலைக் கழகம்

