உலகப் புகையிலை எதிர்ப்பு நாள் இன்று அனுசரிப்பு
புகையிலைப் பயன்பாட்டால் ஆண்டுதோறும் உலகில் எட்டு மில்லியனுக்கும் மேற்பட்டோர் உயிரை இழக்கின்றனர். இதே வேகத்தில் புகையிலைப் பயன்பாடு தொடர்ந்தால் 2030ஆம் ஆண்டுவாக்கில் இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படும் உயிரிழப்பை 2030ஆம் ஆண்டுவாக்கில் மூன்றில் ஒரு பங்கு குறைக்க இலக்கு வகுக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய புகையிலை நெருக்கடி, அதனால் விளையும் மரணங்கள், நோய்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, 1987ஆம் ஆண்டு மே 31ஆம் தேதியை உலகப் புகையிலை எதிர்ப்பு நாளாக அனுசரிப்பது என்று உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டன.
அப்போது முதல், புகையிலைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வூட்ட ஒவ்வோர் ஆண்டும் மே 31ஆம் தேதி உலகப் புகையிலை எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
புகையிலை எதிர்ப்பு நாளின் முக்கியத்துவம்
புகைப்பழக்கம் ஒருவரின் வாழ்நாளை ஏறத்தாழ 13 ஆண்டுகள் குறைத்துவிடக்கூடும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலில் வேறு நோய்கள் இருந்து, புகைப்பழக்கத்தைத் தொடர்ந்தால் அது ஒருவரின் வாழ்நாளை மேலும் குறைத்துவிடும்.
புகைப்பழக்கம் இல்லாவிடில் உலகில் பெரும் எண்ணிக்கையிலான மரணங்களைத் தடுக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
புகைப்பழக்கம் ஒருவரின் கருவுறும் திறனை பாதிக்கிறது என்பதையும் பல சுவாச நோய்களுக்கு இட்டுச்செல்கிறது என்பதையும் மறந்துவிடலாகாது.
இருந்தாலும், உலகளவில் எல்லா வயதினரிடத்திலும் புகையிலைப் பொருள்கள் பயன்பாடு பரவலாக இருக்கிறது என்பது வேதனை தரும் செய்தி.
ஆக அதிகமாக, சீனாவில் ஏறக்குறைய 300 மில்லியன் பேருக்குப் புகைப்பழக்கம் உள்ளது. இந்தியா, பிரேசில், இந்தோனீசியா, மலாவி, அர்ஜெண்டினா, தான்சானியா, ஸிம்பாப்வே, பாகிஸ்தான் ஆகியவை புகையிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் முதல் பத்து இடங்களில் உள்ள மற்ற நாடுகள்.
இவ்வாண்டிற்கான கருப்பொருள்
ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளுடன் உலகப் புகையிலை எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. எந்த வடிவிலும் புகையிலையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்தும் அதனால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.
அவ்வகையில், 'சுற்றுச்சூழலைக் காப்போம்' என்பது இவ்வாண்டிற்கான உலகப் புகையிலை எதிர்ப்பு நாளின் கருப்பொருள்.
மக்களின் உடல்நலத்துடன் சுற்றுச்சூழலையும் எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை இது வலியுறுத்துகிறது.
அத்துடன், சுற்றுச்சூழல்மீது புகையிலை ஏற்படுத்தும் கடுமையான விளைவுகளை மக்கள் எந்த அளவிற்குப் பொருட்படுத்தாமல் உள்ளனர் என்பதையும் இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
எடுத்துக்காட்டாக, தூக்கி எறியப்படும் சிகரெட் துண்டுகள் எந்த அளவிற்கு நெகிழி மாசுபாட்டிற்குப் பங்களிக்கிறது என்பதைப் பற்றி மக்களிடம் அதிக புரிதல் தேவைப்படுகிறது. மேலும், புகையிலைப் பயிரிடலுக்கு அதிக அளவு நீரும் உரங்களும் தேவைப்படுகின்றன.
சிகரெட் புகைப்பதன் மூலம் 84,000,000 டன் கரியமிலவாயு வளிமண்டலத்தில் கலக்கிறது என்பதன்மூலம் சிகரெட்டுகள் சுற்றுச்சூழலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மதிப்பிடலாம்.
புகையிலையால் வெளியாகும் புகை மூன்று வெவ்வேறு பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுகின்றன.
புகையிலைப் பயன்பாட்டைக் கைவிடுவதால் புற்றுநோய் போன்ற உயிரைப் பறிக்கவல்ல நாட்பட்ட நோயைத் தடுக்கலாம். அத்துடன், நீடித்து நிலைக்கத்தக்க வளர்ச்சி இலக்குகளை உலகம் எட்டவும் அது கைகொடுக்கும்.
குரல் பாதிக்கப்படலாம்
புகைப்பழக்கம் குரலையும் பாதிக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
"சிகரெட் போன்ற புகையிலைப் பொருள்களில் நூற்றுக்கணக்கான வேதிப்பொருள்கள் உள்ளன. அந்த வேதிப்பொருள்கள் ஒருவரது குரல் நாண்களில் அழற்சியை ஏற்படுத்தலாம். ஒவ்வொரு முறை புகைக்கும்பொழுதும், குரல் நாண்கள் வழியாகப் புகை நுரையீரலைச் சென்றடைகிறது. எந்தப் புகையை சுவாசித்தாலும் அது அழற்சி, தொண்டை எரிச்சலை ஏற்படுத்தி, சளியையும் இருமலையும் அதிகப்படுத்தும்," என்கிறார் மும்பை குளோபல் மருத்துவமனையின் காது-மூக்கு-தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவர் பிரார்த்தனா ஜக்தாப்.
அத்துடன், புகைப்பழக்கம் குரல் நாணின் சமச்சீர், வீச்சு, சுழற்சி ஆகியவற்றில் குறிப்பிடத்ததக்க மாற்றங்களை ஏற்படுத்தி, ஒருவரது குரல் தன்மையையே மாற்றிவிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"புகைப்பழக்கம் உள்ள ஒருவரின் குரலைப் பாதுகாக்க, கூடிய விரைவில் அப்பழக்கத்தை அவர் கைவிடுவதுதான் ஒரே வழி. குரல் நாண், குரல்வளை அழற்சி குணமாக மாதக்கணக்கில் ஆகலாம் என்றாலும், புகைப்பதைக் கைவிட்ட ஒரு சில வாரங்களிலேயே நல்ல மாற்றங்களைக் காணலாம்," என்றார் டாக்டர் பிரார்த்தனா.
புகைப்பதால் வாய்ப்பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விவரித்த மும்பை சர் எச் என் ரிலையன்ஸ் அறநிறுவன மருத்துவமனையின் மருத்துவர் புஜன் பரிக், "புகைப்பதால் வாய்ப்பகுதியில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். கறைபடிந்த பற்கள், ஈறு பிரச்சினைகள், பற்சிதைவு போன்ற பாதிப்புகளும் தோன்றி, பின்னர் பற்களையே பறிகொடுக்க நேரிடலாம்," என்றார்.
புகையிலை குறித்த முக்கியத் தகவல்கள்
♦ ஆண்டுதோறும் எட்டு மில்லியனுக்கு மேற்பட்டோர் மரணத்திற்குப் புகையிலை காரணமாகிறது. ஏழு மில்லியனுக்கு மேற்பட்டோர் நேரடிப் புகையிலைப் பயன் பாட்டாலும் பிறர் புகைப்பதன் மூலம் வெளியிடும் புகையை சுவாசிப்பதால் கிட்டத்தட்ட 1.2 மில்லியன் பேரும் இறக்க நேரிடுகிறது.
♦ உலகில் புகையிலை பயன்படுத்தும் 1.3 பில்லியன் பேரில் 80 விழுக்காட்டினர் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
♦ 2020ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் 22.3 விழுக்காட்டினர் புகையிலை பயன்படுத்தினர்.
♦ புகையிலையைப் பயிரிடுவதற்காக ஒவ்வோர் ஆண்டும் உலகில் ஏறத்தாழ 3.5 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பு அழிக்கப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுதோறும் 200,000 ஹெக்டர் காடுகள் அழிக்கப்படுகின்றன; மண் அரிப்பும் ஏற்படுகிறது.
♦ புகையிலைப் பயன்பாட்டால் உலகின் நீர், புதைபடிவ எரிபொருள், தாதுப்பொருள் வளம் குறைந்து போகிறது.
♦ ஒவ்வோர் ஆண்டும் 4.5 டிரில்லியன் சிகரெட் துண்டுகள் முறையாக அப்புறப்படுத்தப்படுவதில்லை. இதன்மூலம் 766,500 டன் நச்சுக் கழிவுகள் உருவாகி, வேதிப்பொருள்கள் ஆயிரக் கணக்கில் காற்றிலும் நீரிலும் நிலத்திலும் கலக்கின்றன.