கடந்த சில வாரங்களாக சிங்கப்பூரில் வெயில் கொளுத்திவரும் நிலையில், தாகம் தீர்த்து, புத்துணர்ச்சி அளிக்கும் பானங்களைப் பலரும் விரும்புவர். அத்தகையதோர் அருமையான பானம்தான், பெரும்பான்மை இந்தியக் குடும்பங்களில் தவறாது இடம்பிடித்திருக்கக்கூடிய மோர்.
தயிரைக் கடைந்து, வெண்ணெய்யை எடுத்தபின் மீந்துள்ளதில் நீரும் சீரகம், புதினா, மிளகாய், இஞ்சி போன்ற மணமூட்டிகளையும் கலந்தால் சுவையான மோர் தயாராகிவிடும்.
தாகம் தணித்து, மனத்திற்கு இதம் அளிக்கவல்ல பானமாக மட்டுமின்றி, தோல், முடி, உடல் எடை சார்ந்த பல நன்மைகளையும் மோர் அருந்துவதன் மூலம் பெறலாம்.
உடலில் அமிலத்தன்மையைக் குறைக்க மோர் பெரிதும் உதவுகிறது. உணவுண்டபின் அடிக்கடி புளிப்பு ஏப்பம் ஏற்பட்டால், மோர் குடிக்கத் தொடங்குங்கள். உணவிற்குப்பின் ஒரு குவளை மோர் அருந்துவது செரிமானத்திற்கு உதவி, அமிலத்தன்மையைத் தடுக்கும்.
மோர் அருந்தும் பழக்கம், இரத்த அழுத்தத்தைக் குறிப்பிடத்தக்க அளவு குறைப்பதாக அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தின் அறிக்கை கூறுகிறது.
கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் 'பி', புரதச்சத்து உள்ளிட்ட சத்துகள் மோரில் நிரம்பியுள்ளன.
உடலை, குறிப்பாக செரிமான மண்டலத்தைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது மோர். வயிற்றெரிச்சலுக்கு மோர் அருந்துவது உடனடி பலன் தரும்.
கொழுப்பு தவிர்த்து பாலில் உள்ள எல்லாச் சத்துகளும் மோரிலும் இருப்பதால் உடல் எடையைக் குறைக்கவும் இது உதவுகிறது.

