ஹர்ஷிதா பாலாஜி
ஆடல், பாடல், நாடகம், இணையம், கைவினைப் படைப்புகள் போன்றவற்றின் உதவியோடு பாடங்களை வடிவமைத்து, தமிழ்ப் பண்பாட்டையும் பாடங்களுடன் இணைக்கிறார் தொடக்கப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றும் திருவாட்டி புவனேஸ்வரி சுப்ரமணியம்.
இவையெல்லாம் தம் மாணவர்களுக்குத் தமிழ்மொழியைக் கற்றுத் தர திருவாட்டி புவனேஸ்வரி கையாளும் வழிமுறைகளில் சில.
அதே நேரத்தில், பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தாங்களே கண்டறியும்படி மாணவர்களை அவர் ஊக்குவிக்கிறார்.
"இக்காலத்து மாணவர்களுக்கு எதிலும் ஆர்வம் அதிகம். அதனால், பிரச்சினைகளுக்குச் சொந்தமாகத் தீர்வுகாணும்படி அவர்களை ஊக்குவிப்பது, பாடத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கிறது," என்றார் திருவாட்டி புவனேஸ்வரி.
தமிழ்மொழி மீதான ஆர்வத்தைச் சிறாரிடத்தில் வளர்ப்பதைப் பற்றி தேசிய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துரையாடியபோது இவற்றைப் பகிர்ந்துகொண்டார் திருவாட்டி புவனேஸ்வரி. அவருடன் மேலும் நால்வர் இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றனர்.
சிங்கப்பூர் புத்தக மன்றத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 26-29 தேதிகளில் நடைபெற்ற 'ஏஎப்சிசி' எனப்படும் சிறுவர் நூல்களுக்கான ஆசிய விழாவின் ஓர் அங்கமாக கடந்த வியாழக்கிழமை 26ஆம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
'செல்லமே' எனும் குழந்தைகளுக்கான உள்ளூர் புத்தக நிறுவனத்தின் இணைத்தலைவர்களான திருவாட்டி ரஸ்மியா பானு யாக்கோபும், திருவாட்டி உஷா குமரனும் தாயார்களாக தங்கள் குழந்தைகளுக்குத் தமிழை எப்படி அறிமுகப்படுத்தினர் என்று பகிர்ந்துகொண்டனர்.
சிறுபிள்ளைகளைக் கவரும் வகையில், தரமான, தொட்டுணரக்கூடிய அம்சங்கள் அடங்கிய தமிழ்ப் புத்தகங்களை உருவாக்கி, அவற்றை உலகெங்கும் உள்ள தமிழ்க் குடும்பங்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அவ்விருவரும் 'செல்லமே' நிறுவனத்தைத் தொடங்கினர்.
"குழந்தைகளுக்குக் கேளிக்கையான முறையில் தமிழைக் கற்றுக்கொடுத்தால்தான் அவர்கள் நம்மைப் பின்பற்றி, தமிழில் பேசி பழகுவார்கள். அதே சமயத்தில், சமூகப் பிரச்சினைகளை அறிமுகப்படுத்த பெற்றோர்கள் புத்தகங்களைப் பயன்படுத்தலாம். இதற்கு நாங்கள் எங்கள் நிறுவனம்வழி உதவ விரும்புகிறோம்," என்று அவர்கள் கூறினர்.
இதேபோல், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமது ஜெர்மானிய கணவருடன் வசித்துவரும் சிங்கப்பூரரான திருவாட்டி வனிதா, தம் பிள்ளைகளுக்கு தமிழ்மொழியைக் கற்றுத்தர 'வாரணம்' என்ற புத்தக நிறுவனத்தைத் தொடங்கினார்.
இறுதியாக, கனடாவின் டொரான்டோ நகரில் வசிக்கும் திருவாட்டி சரண்யா ஜெனீற் 'தமிழ் கதை நேரம்' என்ற புத்தக நிறுவனத்தைப் பற்றியும் 'மாயக்கல்லும் அதிவீரர்களும்' என்ற புத்தக்கத்தை எழுதியுள்ளதைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

