உடல்நலம், மனநலம் குறித்து விழிப்பூட்டிய சுகாதார விழா

உடல்நலம், மனநலம் குறித்து விழிப்பூட்டிய சுகாதார விழா

2 mins read

ஆ. விஷ்ணு வர்தினி

உடல்நலம் சார்ந்த ஆயுர்வேத தயாரிப்புகளைச் சிங்கப்பூர் வணிகச் சந்தையில் அதிகரிக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் பி. குமரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவைப் பண்பாட்டு மருத்துவத் தகவல்களின் புதையலிடமாக குறிப்பிட்ட திரு குமரன், உடல், மனநலத்தைப் பேணுவதில் அது முக்கியப் பங்கு வகிப்பதாகவும் கூறினார்.

கடந்த சனிக்கிழமை அரசாங்க சேவை மன்றத்தில் நடந்த 'வெல்னஸ் 360' சுகாதார விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஏறத்தாழ 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் சார்ந்த இலவச உடல்நல சேவைகளையும் விலைக் கழிவுகளையும் பெற்றுப் பயனடைந்தனர். உடல்நலம் சார்ந்த பல நிறுவனங்களும் வணிகங்களும் நிகழ்வில் பங்கேற்று, தங்களது சேவைகளையும் தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தின.

'ஆரோக்கியமான இதயம், ஆரோக்கியமான வாழ்க்கை' என்ற தலைப்பில் இடம்பெற்ற சொற்பொழிவில் இதய நோய்களின் பின்னணியையும் தவிர்க்கும் வழிமுறைகளையும் குறித்து விளக்கினார் இதய மருத்துவர் முனைவர் வி. பி. நாயர். சுகாதாரம் என்பது நோய்நொடியில்லாத நிலை மட்டுமன்று, முழுமையான உடல், மன, சமூக நலம் என்ற உலக சுகாதார அமைப்பின் விளக்கத்தை மேற்கோள் காட்டினார் டாக்டர் வி.பி.நாயர். இதய நோய்களைத் தவிர்க்கவும் அவற்றில் இருந்து குணமடையவும் உணவுமுறை மாற்றம் மட்டும் போதாது, வாழ்க்கைமுறையை மாற்றி அமைப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

'வெல்னஸ் 360' போன்ற சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வுகளை இன்னும் வழக்கமாகச் செயல்படுத்த திட்டமிடுவதாக கூறினார் 'ஆண்ட்ரூ அண்ட் பார்க்கர்ஸ்' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான முனைவர் சரவணன்.