அருணா கந்தசாமி
ராம் ஷர்மா சிங்கப்பூரை அடித்தளமாகக் கொண்டு செயல்படும் 'பேங்க்-ஜீனி' எனும் வங்கிச் சேவையின் இணை நிறுவனர்.
பல்வேறு நாடுகளில் அடிப்படை வசதிகளுக்கே சிரமப்படும் கிராம மக்களுக்கு வங்கிச் சேவைகளை மின்னிலக்க வடிவில் வழங்க உதவுகிறது 'பேங்க்-ஜீனி'.
2015ஆம் ஆண்டு ராம் ஷர்மா கத்தாரின் டோஹா விமான நிலையத்தில் இடைவழிப் பயணியாகக் காத்திருந்தபோது, வங்கி ஒன்று நிதிப் பற்றாக்குறையால் சில இடங்களில் கிளைகளை அமைக்கச் சிரமப்படுவதைக் கேள்விப்பட்டார். இதற்கு ஏதாவது தீர்வுகாண வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது.
சில மாதங்கள் கழித்து தனது வர்த்தகப் பங்காளி ரகுநந்தனுடன் மைசூரில் இருந்து உதகமண்டலத்துக்குச் சென்றபோது ஒரு தானியக்க வங்கிச் சேவை இயந்திரத்தை அடைய அவர் 100 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய நேரிட்டது.
கிராமப்புற மக்களின் சிரமத்தை நீக்கி அவர்களுக்கு வங்கிச் சேவை கிடைக்கச் செய்யவேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் வேரூன்ற இது காரணமாக அமைந்தது.
பொருத்தமான கணினி மென்பொருளை உருவாக்கியதுடன் 2016ஆம் ஆண்டு ரகுநந்தனுடன் இணைந்து 'பேங்க்-ஜீனி'யைத் தொடங்கினார்.
தென்கிழக்காசியா, மத்திய ஆசியா, மேற்கு ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா ஆகியவற்றில் பல நாடுகளின் கிராமப்புற வங்கிகளுக்கும் சிறிய நிதி நிறுவனங்களுக்கும் கைகொடுக்கிறது 'பேங்க்-ஜீனி'. பிலிப்பீன்சின் 'பிடிஓ யூனிபேங்க்', 'ஈஸ்ட்வெஸ்ட்' வங்கி, 'யூனியன்' வங்கி போன்றவையும் இதன் வாடிக்கையாளர்கள்.
முன்பெல்லாம் கிராம மக்கள் நெடுந்தொலைவு பயணம் செய்து அருகில் உள்ள நகரங்களின் வங்கிக் கிளைகளுக்குச் சென்று அங்கு நீண்ட வரிசைகளில் காத்திருக்க நேர்ந்தது. சிபு போன்ற தீவுகளில் இருப்போர் வங்கிக் கடன் கிடைக்காமல் அதிக வட்டிக்கு கடன் தருவோரை நாட வேண்டியிருந்தது.
ஆனால் தற்போது பாரம்பரிய வங்கிகள் 'மொபைல் பேங்கிங்' எனும் கைத்தொலைபேசி மூலம் வங்கிச் சேவை வழங்குவதற்கு குறைந்த செலவில் ஏற்பாடு செய்துள்ளது 'பேங்க்-ஜீனி'.
ஆண்டுக்கு மூன்று மில்லியன் டாலர் வருவாய் ஈட்டுவதாகக் கூறிய ராம் ஷர்மா, நீண்டகால அடிப்படையில் உலகெங்கும் உள்ள நிதி நிறுவனங்களுக்கு புத்தாக்க வடிவிலான மின்னிலக்கப் பொருள்களை உற்பத்தி செய்து வழங்குவதே தங்கள் இலக்கு என்று கூறினார்.

