புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றம் கடந்த மாதம் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணிக்கு அன்னையர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
புக்கிட் பாஞ்சாங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு, 'ஐஆர்சிசி' எனப்படும் இன, சமய நன்னம்பிக்கை குழு ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
புக்கிட் பாஞ்சாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அன்னையர் தினக் கொண்டாட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் புதுமையான வகையில் சிறப்பு அம்சத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று புக்கிட் பாஞ்சாங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் தலைவர் திருமதி கௌசல்யா ராமச்சந்திரா கூறினார்.
இவ்வாண்டின் சிறப்பு அம்சமாக 85 முதல் 92 வயது வரையிலான மூத்த அன்னையருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்தியர், சீனர், மலாயர் என மூன்று இனங்களில் இருந்தும் இனத்துக்கு இருவர் என்ற அடிப்படையில் ஆறு அன்னையர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மகுடம் சூட்டி மரியாதை செலுத்தப்பட்டது.
அன்பாலும் வயதாலும் முதிர்ந்த இந்த அன்னையர்க்கு விருப்பமான பழங்கள் மற்றும் பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டன.
1985ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட புக்கிட் பாஞ்சாங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு, பெண்களால் மட்டுமே நடத்தப்பட்டு வரும் ஒரே சமூக மன்ற நற்பணிச் செயற்குழு என்ற சிறப்புக்கு உரியது.
இந்த ஆண்டு அன்னையர் தினக் கொண்டாட்டத்தில் கடந்த 35 ஆண்டுகளாக இதில் தொண்டூழியம் செய்த அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். புக்கிட் பாஞ்சாங் சமூக மன்ற அன்னையர் தினக் கொண்டாட்டத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் அதிர்ஷ்டக் குலுக்கல், புதையல் வேட்டை போன்ற அங்கங்களும் இடம்பெற்றன.

