கி. ஜனார்த்தனன்
வான்குடை சாகச வீரர்கள் விண்ணில் இருந்து குறிப்பிட்ட தொலைவு வரை சிறகின்றிக் காற்றில் பறந்து வந்த பிறகே 'பாராசூட்' எனப்படும் வான்குடையை விரிப்பார்கள்.
'ஸ்கைடைவிங்' எனப்படும் இந்தச் சாகசம் பார்ப்போரைக் கவரக்கூடியது. ஆனாலும் சிலருக்கு இதில் ஈடுபட பயமாக இருக்கலாம். இத்தகையோர் அச்சமின்றி நான்கு சுவர்களுக்குள்ளாகவே இந்த அனுபவத்தைப் பெறுவதற்குக் கைகொடுக்கிறது 'ஐஃபிளை' சிங்கப்பூர்.
செந்தோசாவில் அமைந்துள்ள 'ஐஃபிளை சிங்கப்பூர்' உலகின் முதல் உள்ளரங்க 'ஸ்கைடைவிங்' நடவடிக்கைக்கான நிலையம். இதில் 56.5 அடி உயரமும் 16.5 அடி விட்டமும் கொண்ட கண்ணாடிக் குழாய்க்குள்ளே விண்ணில் இருந்து குதிக்கும் அனுபவத்தைப் பெறலாம்.
12,000 அடி உயரத்தில் இருந்து 3,000 அடி வரை பறந்து கீழிறங்கும் அனுபவத்துக்கு இது ஈடாகும்.
இந்த ஆண்டு அதன் 10ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் 'ஐஃபிளை சிங்கப்பூர்' கண்பார்வையற்றோர், உடற்குறையுள்ளோர் போன்றோருக்கான சிறப்பு நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்தது.
இவர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை வழங்குவது நோக்கம்.
ஏழு வயதுச் சிறார்கள் முதல் நூறு வயது வயோதிகர்கள் வரை ஏறக்குறைய 1,000க்கும் மேற்பட்டோர் இந்நடவடிக்கையில் பங்கேற்றதாக 'ஐஃபிளை சிங்கப்பூர்' தமிழ் முரசிடம் தெரிவித்தது.
சிறப்பு நடவடிக்கையில் கலந்துகொண்டோரில் 63 வயது கலைவாணனும் ஒருவர். இளம் வயதிலேயே ஒரு காலை இழந்த இவர் ஓர் உடலுறுதிப் பயிற்றுவிப்பாளர்.
தனது உடல் வலிமையைச் சோதிக்கக்கூடியதாக இந்நடவடிக்கை இருந்தது என்றார் கலைவாணன். "இருந்தாலும் இந்த அனுபவம் மனத்திற்கு உல்லாசமாக இருந்தது," என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் ஆயுதப்படையின் முன்னாள் அதிகாரியான கலைவாணனின் முழங்காலில் கட்டி வளர்ந்ததால் 22 வயதில் அவரது இடது காலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற நேரிட்டது.
இரு பிள்ளைகளுக்குத் தந்தையான இவர் பல்வேறு சிரமங்களுக்கிடையே எதிர் நீச்சல் போட்டு உடலுறுதிப் பயிற்றுவிப்பாளராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். இந்தச் சிறப்பு நடவடிக்கை மிகுந்த பாதுகாப்புடன் தமக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
வாழ்க்கையில் பல்வேறு இடையூறுகளை வெற்றிகரமாக எதிர்கொண்ட கலைவாணன் போன்றோருக்கு இந்த அனுபவம் மறக்க முடியாததாக அமையும் என நம்புவதாக 'ஐஃபிளை' சிங்கப்பூரின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு லாரன்ஸ் கோ கூறினார்.

