வரும் 2030ஆம் ஆண்டில் 6ஜி தொழில்நுட்பம் வந்துவிடும் என நம்புகிறார் நோக்கியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெக்கா லண்ட்பெர்க். அதன்பின், இப்போது பெரும்பாலும் அனைவரது கைகளிலும் தவழும் திறன்பேசி பயன்பாட்டில் இல்லாமல், வழக்கொழிந்து போய்விடலாம் என்று அவர் கூறியுள்ளார்.
"அப்போது, திறன்பேசிகள் பெரும்பான்மையினர் பயன்படுத்தும் கருவியாக இராது. அதிலுள்ள பல அம்சங்களும் நமது உடலுடன் நேரடியாக கட்டமைக்கப்பட்டிருக்கும்," என்று, அண்மையில் நடந்த உலகப் பொருளியல் கருத்தரங்கில் திரு லண்ட்பெர்க் தெரிவித்தார்.
ஆனாலும், திறன்பேசி வழக்கற்றுப் போனால் அதன் இடத்தை எக்கருவி நிரப்பும் என்பது பற்றி அவர் எதையும் குறிப்பிடவில்லை.
'நியூராலிங்க்' போன்ற பல நிறுவனங்கள், மனித உடலில் பொருத்தக்கூடிய கணினிச் சில்லுகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன.
6ஜி தொழில்நுட்பம் குறித்த ஆய்வுகள் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளன. ஆனாலும், வரும் ஆண்டுகளில் மெய்நிகர் (VR), மிகைமெய் (AR) ஆகிய தொழில்நுட்பங்களுடன் கூடிய கருவிகள் முதன்மையிடம் பெறலாம் எனச் சொல்லப்படுகிறது.
மெய்யுலகும் மின்னிலக்க உலகும் இணைந்தே வளர முடியும் என்பது திரு லண்ட்பெர்க்கின் நம்பிக்கை. அதாவது, 6ஜி தொழில்நுட்பத்தின் ஆதரவுடன் 'மெட்டாவெர்ஸ்' போன்ற தொழில்நுட்பங்கள் சிறப்பாகச் செயல்படலாம்.
இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் 5ஜி தொழில்நுட்பமே அறிமுகப்படுத்தப்படாத நிலையில், 6ஜி தொழில்நுட்பம் குறித்து திரு லண்ட்பெர்க் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.