பலர் காரமான உணவை விரும்பி உண்கிறோம். ஆனால் அதிகக் காரமான உணவைச் சாப்பிடுவதால் புற்றுநோய் உருவாகலாம் என்று எத்தனை பேருக்குத் தெரியும்?
தினமும் நம்மை அறியாமலேயே நாம் பின்பற்றும் ஒருசில பழக்கவழக்கங்களும் நம் வாழ்க்கைமுறையும் புற்றுநோய் வரக் காரணமாக அமைந்துவிடலாம். 10 இந்தியர்களில் ஒருவர் தம் வாழ்நாளில் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார் என்றும் 15 பேரில் ஒருவர் புற்றுநோயால் இறக்கிறார் என்றும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையைக் காலஞ்சென்ற பிறகு கைவிடுவதைவிட இளமை முதல் விழிப்புணர்வுடன் இருக்க ஒரு சில அம்சங்களில் கவனம் செலுத்தலாம்.
காரமான, சூடான உணவு: அதிக சூடோ காரமோ உள்ள உணவைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அவற்றைச் சாப்பிடுவதால் நுரையீரல், வாய், வயிற்றுப்பகுதி ஆகியவற்றில் புற்றுநோய் உருவாகக்கூடும்.
இந்தியர்கள் தங்கள் உணவில் பயன்படுத்தும் மசாலாக்களும் அதிகமாகச் சேர்க்கப்படும்போது புற்றுநோய் உருவாவதற்கான சாத்தியத்தை அதிகமாக்கலாம் என்று ஆய்வுகள்வழி கண்டறியப்பட்டுள்ளது.
நார்ச்சத்து: நார்ச்சத்துள்ள உணவுவகைகளைத் தவிர்ப்பதாலும் அதைக் குறைவாக உட்கொள்வதாலும் பெருங்குடல் புற்றுநோய் வரலாம்.
சிவப்பு இறைச்சியை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதைத் தவிர்த்து, நார்ச்சத்து அதிகமுள்ள பழங்கள், காய்கறி வகைகள், முழு தானியங்கள், பருப்பு வகைகளைத் தெரிவுசெய்வது ஆரோக்கிய உணவுமுறைக்கு நல்ல அடித்தளமாகும்.
அதிக சூரிய வெளிச்சம்: உடலில் சூரிய வெப்பம் அதிகம் படும்போது உயிரணுக்கள் பாதிக்கப்படும். அது சருமப் புற்றுநோய் ஏற்படுவதற்கும் வழி வகுக்கலாம். குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட பிரிவினர், வெயிலின் தாக்கத்திற்கு உள்ளாவது பாதிப்பை அதிகப்படுத்திவிடும். மதிய வேளையில் சூரிய ஒளி அதிகம் உடலில் படர்வதைத் தவிர்ப்பதே சிறப்பு.
செயலற்ற தன்மை: உடல் அசைவுகள் அதிகம் இல்லாமல் ஒரு செயலற்ற நிலையில் இருப்பது, உடலில் கொழுப்புச்சத்து அதிகரிப்பது, மது அருந்துவது, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றின் காரணமாக புற்றுநோய் ஏற்படுவதற்கு 18% வாய்ப்பு இருப்பதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியகம் கணித்துள்ளது.
உடற்பயிற்சி செய்யாதது, அதிகக் கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை உட்கொள்வது, நோய் எதிர்ப்புசக்தி குறைவது போன்ற காரணங்களால் பலர் புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள்.
புகையிலைப் பொருள்கள்: புகையிலைப் பொருள்களால் ஒருவரின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது பலர் அறிந்ததே. சிகரெட்டுகள், வெற்றிலைப் பாக்கு, சுருட்டு, பீடி போன்றவை நுரையீரலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.
அது தொண்டை வழியாக வயிற்றுப்பகுதிக்குச் சென்றடைந்து புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கச்செய்யும்.
புகையிலையால் குரல்வளை, நுரையீரல், உணவுக்குழாய், சிறுநீர்ப்பை, தொண்டை, சிறுநீரகம், வயிறு, கல்லீரல், பெருங்குடல், கணையம், மலக்குடல், கருப்பைவாய் உள்ளிட்ட பகுதிகளில் புற்றுநோய் உருவாகலாம்.
தாய்ப்பால்: தாய்ப்பால் கொடுப்பது மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை 30% குறைக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது அல்லது மிகவும் குறைவாகக் கொடுப்பது புற்றுநோய்க்கு வழிவிடலாம்.
எனவே, மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்குப் பெண்கள் தாய்ப்பால் கொடுக்கத் தயங்கவேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது.
செய்தி: இணையம்

