'லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்' கவிதை நூல் குறித்த கலந்துரையாடல் அங்கமும் 'திணைகள்' இணைய இதழின் துவக்க விழாவும் கடந்த மாதம் 21ஆம் தேதியன்று தேசிய நூலக வாரியத்தில் நடைபெற்றன.
சிங்கப்பூர் நிலம் தொடர்பான இலக்கிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் அறைகூவல் விடுத்தார். முதல் நூலை முனைவர் சுப.திண்ணப்பன் வெளியிட, 'தமிழ்க்யூப்' கல்வி நிறுவனத்தின் நிறுவனரான ஏ.டி.பிள்ளை அதைப் பெற்றுக்கொண்டார். உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலரும் இன்பாவின் கவிதைகளை வாசித்துத் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.
'திணைகள்' இணையத்தளத்தை ஆசியப் புத்தாக்க எழுத்துமுறை திட்டத்தின் வருகை தரும் பேராசிரியராக சிங்கப்பூர் வந்திருக்கும் கவிஞர் பெருந்தேவி துவக்கிவைத்தார். புலம்பெயர் இலக்கியத்தின் அடையாளம், தொழில்முறை, பழக்கவழக்கம், நிலம் சார்ந்த மக்களின் வாழ்வியல் பண்பாடு, திணை சார்ந்த கோட்பாடுகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தும் நோக்கத்துடன் இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. திணைகளைச் சார்ந்தவாறு நவீன இலக்கியத்துடன் பயணிக்க விரும்பும் படைப்பாளர்கள், கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நேர்காணல்கள் என எந்த வகையிலும் இதில் பங்களிக்கலாம் எனக் கவிஞர் இன்பா குறிப்பிட்டார்.
முதல் இணைய இதழில் நவீன இலக்கியத்தின் முகமாக விளங்கக்கூடிய மிக முக்கியமான படைப்பாளர்களின் கவிதைகளும் கட்டுரைகளும் என 40 பதிவுகள் வெளியாகியுள்ளன. www.thinaigal.com என்ற முகவரியில் படைப்புகளை வாசிக்கலாம். படைப்புகளை editor@thinaigal.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.

