'ஸ்மார்ட்' தொலைக்காட்சி, 'ஸ்மார்ட்' கைபேசி வரிசையில் புதிதாக வந்திருப்பது 'ஸ்மார்ட்' தண்ணீர் பாட்டில்.
இந்த நவீன வாழ்க்கை முறையில் தாகம் எடுத்தால் கூட நாம் சரியாக தண்ணீர் குடிப்பதில்லை. அந்தளவுக்கு பல்வேறு வேலைகளில் மூழ்கிக் கிடக்கிறோம். அப்படியே குடித்தாலும் நம் உடலுக்குத் தேவைப்படுகிற தண்ணீரை நாம் எடுத்துக்கொள்வதில்லை.
நம் உடல் ஆரோக்கியமாக இயங்க நீர்ச்சத்தை சரியான முறையில் பராமரிப்பது அவசியம். அதற்கு தேவையான அளவு தண்ணீரை நாம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தைக் கண்காணித்து நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருப்பதற்காக வந்திருக்கிறது 'ஸ்மார்ட்' தண்ணீர் பாட்டில். இந்த நூற்றாண்டின் முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக 'ஸ்மார்ட்' தண்ணீர் பாட்டிலைச் சுட்டிக்காட்டுகின்றனர் நிபுணர்கள்.
நாம் வாங்கும் பாட்டில்களுக்கு ஏற்ற செயலிகள் இருக்கின்றன. அந்த செயலிகளை கைத்தொலைபேசிகளில் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன.
அந்தச் செயலியை தரவிறக்கம் செய்து தண்ணீர் பாட்டிலுடன் இணைத்துவிட்டால் போதும். நம் உடலின் நீர்ச்சத்தைக் கணக்கிட்டு நாம் எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை அது நினைவுபடுத்தும்.
இப்படி நினைவுபடுத்துவதற்காகவே தண்ணீர் பாட்டிலில் ஒரு சிறிய குமிழ் விளக்கு பொருத்தியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, பாட்டிலுக்குள் இருக்கும் உணர்கருவி தினமும் நீங்கள் எத்தனை முறை தண்ணீர் குடிக்கிறீர்கள், எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதை செயலியில் பதிவு செய்துகொள்ளும்.
அத்துடன் உங்களின் உடல் செயல்பாட்டைக் கணக்கிட்டு தினமும் நீங்கள் எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்பதையும் பரிந்துரைக்கும். உடலில் நீர்ச்சத்து குறைந்துவிட்டால் உடனே எச்சரிக்கை மணியை அடிக்கும். நம் உடலின் நீர்ச்சர்த்தைக் கவனித்துக்கொள்வதில் ஒரு மருத்துவரைப் போல செயல்படுகிறது இந்த 'ஸ்மார்ட்' தண்ணீர் பாட்டில்.

