பதின்ம வயதுப் பெண்கள் தங்களின் கைபேசியில் சராசரியாக 14 முறை 'செல்ஃபி' எடுத்த பின்னரே அதில் ஒன்றைத் தங்கள் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவேற்றம் செய்வதாக அண்மைய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
தங்களின் படத்தை மெருகூட்டினால் மட்டுமே தாங்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதாக நான்கில் ஒருவர் கூறுகிறார். அத்துடன் சமூக ஊடகத்தில் சித்திரிக்கப்படும் அழகு சார்ந்த செய்திகளைப் பார்க்கும்போது தங்களின் தன்னம்பிக்கை குறைவதாக இரண்டில் ஒருவர் கூறுவதாக 'டவ் செல்ஃப்-எஸ்டீம் புரொஜெக்ட்' ஆய்வு தெரிவித்துள்ளது. சமூக ஊடகம் ஏற்படுத்திவரும் தாக்கத்தை எதிர்த்துப் போரிடுவது பெற்றோருக்குச் சிரமமாக இருக்கலாம்.
இருப்பினும், 'இதுதான் அழகு' என்று சமூக ஊடகங்களில் நம்பத்தகாத முறையில் சித்திரிக்கப்படும் அம்சங்கள் தொடர்பில் தங்களின் பெற்றோர் தங்களிடம் பேச வேண்டும் என்று பதின்ம வயதுப் பெண்களில் 70 விழுக்காட்டினர் விரும்புவதாகவும் ஆய்வு கூறுகிறது.
பதின்ம வயதினர் தங்களின் நண்பர்களுடன் செலவிடும் நேரத்தைக் காட்டிலும் கைபேசியின் சமூக ஊடகப் பக்கங்களில்தான் மூழ்கியிருப்பதை இந்நாளில் விரும்புகின்றனர். யூடியூப், டிக்டாக் தளங்களில் காணொளிகள் பார்ப்பதும் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் பக்கங்களில் பதிவிடுவதுமாக குனிந்த தலை நிமிராமல் இவ்வயதினர் நடமாடுகின்றனர்.
குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் இணைந்திருக்கச் சமூக ஊடகங்கள் கைகொடுத்தாலும் சமூக ஊடகப் பயன்பாட்டால் 14 வயதுடையோருக்குள் மனச்சோர்வு அறிகுறிகள் ஏற்படுவதாக மருத்துவ இதழான 'ஈகிளினிக்கல்மெடிசன்' குறிப்பிட்டுள்ளது. கவலை, அதிருப்தி, தனிமை போன்ற உணர்வுகளை உள்ளடக்கியதாக இந்த மனச்சோர்வு அறிகுறிகள் அமைந்துள்ளன.
ஆண்பிள்ளைகளைக் காட்டிலும் பெண்பிள்ளைகளிடையே இந்தப் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டது.
ஒரு நாளில் ஒன்றிலிருந்து மூன்று மணி நேரம் வரை சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் பதின்ம வயதினருடன் ஒப்பிடுகையில் ஐந்து மணி நேரத்திற்கு மேல் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும் பதின்ம வயதுப் பெண்களிடையே 50% அதிகமான மனச்சோர்வு அறிகுறிகள் காணப்பட்டன என்றும் பதின்ம வயது ஆண்களிடையே பதிவான அதிகரிப்பு 35% என்றும் அறியப்படுகிறது.
சேர்ந்து சமூக ஊடகப்
பக்கங்களைப் பார்வையிடுங்கள்
பதின்ம வயதுடைய உங்களின் பிள்ளையுடன் சேர்ந்து அமர்ந்தவாறு அவர்களின் சமூக ஊடகப் பக்கத்தில் தோன்றும் தகவல்களையும் படங்களையும் பார்வையிடுங்கள்.
எவை உண்மை, எவை பொய் என்று கருத்து கேளுங்கள். சமூக ஊடகத்தில் சிலர் தங்களின் சருமம் மேலும் பொலிவாகவும் அழகாகவும் தோன்றவோ உடல் மெலிந்து காணப்படவோ தங்களின் படங்களுக்கு மெருகூட்டி இருக்கலாம் என்று உங்களின் பிள்ளைகளிடத்தில் உணர்த்துங்கள்.
பொய்யான முகத்தை இணையத்தில் காண்பிக்கும்போது அதில் நம்பகத்தன்மை குறைகிறது என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.
பயனுள்ள பயன்பாட்டை
ஊக்குவியுங்கள்
பதின்ம வயதினரிடமிருந்து அவர்களின் கைபேசியைப் பிரிப்பது கடினம். அதனால் கைபேசியைப் பயனுள்ள முறையில் பயன்படுத்த அவர்களை ஊக்குவியுங்கள்.
வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் இணையவும் அறிவைப் பெருக்கும் வகையில் அமைந்த தகவல்களை நாடவும் சமூக ஊடகங்களின் பக்கம் செல்லுமாறு வலியுறுத்துங்கள்.
பலன் தராதவற்றைப்
புறந்தள்ளுங்கள்
இணையத்தில் தங்களை பாதிக்கும் வகையில் அழகு பராமரிப்பு ஆலோசனைகள் அமைந்தால் ஒரு சிலர் உடனே அந்தக் குறிப்பிட்ட சமூக ஊடகப் பக்கத்திற்கு மீண்டும் செல்லாதவாறு முடக்கிவிடுகிறார்கள். அவ்வாறு செய்த பிறகு தங்களுக்கு ஆறுதலாக இருப்பதாக நான்கில் இரண்டு பெண்கள் கூறுகின்றனர்.
பிள்ளைகளின் உலகுக்குள் செல்லுங்கள்
அதனால், பெற்றோர் முதலில் தங்களின் பிள்ளைகள் நாடும் சமூக ஊடகப் பக்கங்களைப் பற்றி அறிந்திருத்தல் அவசியம். மற்ற பெற்றோருடனும் இது குறித்துக் கலந்துரையாடி ஆலோசனைகளைப் பரிமாறிக்கொள்ளலாம்.
முக்கியமாக, உங்கள் பிள்ளைகளிடம் வெளிப்படையாகப் பேசுங்கள். உங்களின் பதின்ம வயதுப் பிள்ளைகளைக் கட்டுப்படுத்துவது நோக்கமல்ல.
தங்களின் சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் நன்மை தரக்கூடியதாக இருப்பதை அவர்களுக்கு உணர்த்துவதே நோக்கமாக இருக்க வேண்டும்.
செய்தி: இணையம்

