காலையில் பலரும் விரும்பி அருந்தும் பானம், காப்பி. அன்றைய தினத்தை இனிதாகத் தொடங்கி வைக்கும் வகையில் அந்த காப்பி அமைவதாகச் சிலர் கருதினாலும் அண்மைய ஆய்வு ஒன்று காப்பியில் புதைந்திருக்கும் சிறப்பை உணர்த்தியுள்ளது.
காப்பி குடிக்காதோருடன் ஒரு நாளில் ஒன்றரை கப் முதல் மூன்றரை கப் வரை காப்பி அருந்துவோரை ஒப்பிடுகையில் காப்பி அருந்தியவர் உயிரிழக்கும் சாத்தியம் 30% குறைவாக இருந்தது. ஒரு தேக்கரண்டி சீனியைத் தங்கள் காப்பியில் கலந்து குடித்த பிரிவினரை இது குறிப்பிட்டிருந்தது.
இனிப்பே அல்லாத காப்பியைக் குடித்தவர்களை, காப்பி குடிக்காதோருடன் ஒப்பிடுகையில் உயிரிழக்கும் சாத்தியம் 16 முதல் 21% குறைவாக இருந்தது.
பிரிட்டனில் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக 37 வயதுக்கும் 73 வயதுக்கும் இடைப்பட்ட 170,000 பேரை உட்படுத்தியது இந்த ஆய்வு.
காப்பியில் சுகாதாரப் பலன்களும் புதைந்திருப்பதை இந்த அண்மைய ஆய்வு காட்டியுள்ளதாக அறியப்படுகிறது.
முன்னதாக இதய நோய், நீரிழிவு நோய், பார்கின்சன்ஸ் நோய், கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் சாத்தியத்தை காப்பி குறைப்பதாக ஆய்வின் வழி தெரியவந்தது.
இதற்கிடையே, காப்பி அருந்தும் பழக்கமுடையவர்கள் பொதுவாகவே ஆரோக்கியமான உணவுத் தெரிவுகளை நாடுவதாகவும் கூறப்படுகிறது.
உடலுக்குத் தெம்பு வேண்டும் என்பதற்காக சோடா குடித்து சர்க்கரை அளவை ஏற்றிக்கொள்வதை விட சிலர் ஒரு கப் காப்பியை அருந்த விரும்புகின்றனர்.
இருப்பினும், அளவுக்கு அதிகமான காப்பி குடிப்பதையும் தவிர்ப்பது நல்லது.
தூங்காமல் படிக்கவோ வேலை பார்க்கவோ விரும்புவோர் அதிகபட்சம் 4 கப் காப்பியைக் குடிக்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
காப்பியா? தேநீரா?
இதற்கிடையே காப்பியை விட தேநீர்தான் சிறந்தது என்று கூறுவோரும் உண்டு. 72 வகை நச்சுப் பொருள்களுக்குத் தேநீரே மருந்து என்று பழைய சீன மருத்துவ நூல் ஒன்று குறிப்பிடுகிறதாம்.
காப்பி, தேநீர் இரண்டிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அளவு அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், காப்பியிலும் தேநீரிலும் இருக்கும் 'கேஃபின்', உயர் ரத்த அழுத்தத்திற்கும் வழக்கத்திற்கு மாறான இதயத் துடிப்புக்கும் இட்டுச் செல்லலாம் என்று கூறப்படுகிறது.
முதுமைக்கால மறதிநோய், புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பு, மூளை வளர்ச்சி ஆகியவற்றுக்குத் தேநீர் சிறந்தது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

