ஜூன் பள்ளி விடுமுறையை முன்னிட்டு மாணவர்களுக்காக இந்தியர் நற்பணி செயற்குழு ஒரு வார நாடகப் பயிலரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் 25க்கு மேற்பட்ட 10 முதல் 16 வயதுடைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இப்பயிலரங்கில் மாணவர்கள் முன்னோடி சமூகத் தலைவர் தமிழவேள் கோ. சாரங்கபாணி, வரலாற்று நாயகன் சங் நீல உத்தமா ஆகியோரின் சிங்கப்பூர் கதைகளை நாடகமாக மேடையேற்றினார்கள்.
விடுமுறை தொடங்கிய உடனே மாணவர்கள் விரைவில் விண்ணப்பித்து ஒரு வாரத்திலேயே இந்நிகழ்ச்சிக்குத் தயாரானார்கள். நிகழ்ச்சியின் முடிவில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
உட்லண்ட்ஸ் அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் மரியம் ஜாஃபரின் வழிகாட்டுதலின்கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்தப் பயிலரங்கு. இதுபோன்ற நாடகப் பயிலரங்குகளும் மேடை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றுவது உட்லண்ட்ஸ் சமூக மன்றத்துக்கு இதுவே முதல் முறை.
அதிபதி நாடகக் குழுவைச் சேர்ந்த திரு புகழேந்தி இப்பயிலரங்கின் பயிற்றுவிப்பாளராகவும் பொறுப்பாளராகவும் இருந்து வழிநடத்தினார்.
இந்தப் பயிலரங்கு மாணவர்கள் மத்தியில் தமிழ் மொழியையும் பேச்சுத்திறனையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. அத்துடன் சிங்கப்பூர் வரலாறு, அறநெறிகள், பண்புநலன்கள், இந்திய கலாசாரம் ஆகியவற்றை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் பயிலரங்கு கவனம் செலுத்தியது.

