இளநரை இருந்தாலே கவலைதான். என்னங்க, வயதாகி விட்டதா என்று சிலர் கேட்டு நம்மை மேலும் கவலையில் ஆழ்த்திவிடுவார்கள்.
ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் என எல்லாமே தொடங்கி, மனதில் மகிழ்ச்சியையே மறக்கச் செய்துவிடும். மீண்டும் முடியைக் கருமையாக்க என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரிடமும் ஆலோசனை கேட்பது மட்டு மல்லாமல் சிலர் இணையத்தில் தீர்வு இருக்கிறதா என்றும் தேட ஆரம்பித்துவிடுவார்கள்.
சிலருக்கு இளநரை இருந்தாலும் கவலையில்லை. முடியை கருமையாக்கிக்கொள்வார்கள். இல்லையென்றால் ஆம், வயதாகிறது என்று சொல்லி கவலையில்லாமல் நகர்ந்து விடுவார்கள்.
சிலர் இளநரையிலேயே சில இடங்களில் மட்டும் வண்ண, வண்ண தலைமுடிச் சாயங்களைப் பூசி அழகுபடுத்திவிடுவார்கள்.
இளநரையைத் தடுக்க பல்வேறு ரசாயனக் கலவைகள் இருந்தாலும் இயற்கை வைத்தியம் தலைமுடிக்கும் நல்லது, பக்கவிளைவுகளும் ஏற்படாது.
'பி12' ஊட்டச்சத்து
'பி12' ஊட்டச்சத்து குறைபாடு: தவறான உணவுப்பழக்கங்களும் உடலில் பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாடுகளும் சருமம், பல் மற்றும் தலைமுடியை மிக மோசமாகப் பாதித்துவிடும். அந்த வகையில் 'பி12' ஊட்டச்சத்து குறைபாடு இள நரையைத் தோற்றுவிக்கும் காரணியாகக் கருதப்படுகிறது. இதனால் உணவில், போதுமான அளவு 'பி12' ஊட்டச்சத்து இருக்கிறதா என்பதை உறுதி செய்வது அவசியம். பால், சோயா பால், இறைச்சி, மீன், முட்டை. பாலாடைக்கட்டி, வேர்க்கடலை போன்றவற்றில் 'பி12' ஊட்டச்சத்து அதிகமாக இருக்கிறது. வேறு ஏதாவது 'பி12' ஊட்டச் சத்து உள்ள உணவையும் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
நீண்டகாலமாகப் புகைபிடித்தல்:
இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு நீண்டகாலமாகப் புகைபிடித்தலும் ஒரு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனால் புகைபிடிப்பவராக இருந்தால் தலைமுடிக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்துக்கும் அதனைக் கைவிடுவது நல்லது.
தலைமுடி பராமரிப்புப் பொருள்கள்
வண்ணச் சாயங்கள், தலைமுடி 'ப்ளீச்சிங்' பொருள்கள், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் ஆகியவற்றில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைட் தலைமுடிக்குக் கேடு விளைவிக்கும். தலைமுடியை, முடிந்தவரை இயற்கைத்தன்மை பாதிக்காமல் பராமரிக்கலாம்.
பற்பசை: பற்களை வெண்மையாக்கும் பொருள்களில் உள்ள 'ஹைட்ரஜன் பெராக்ஸைட்' அதிகமாகப் பயன்படுத்தப்படும்பொழுது, அது இளநரையை உண்டாக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இதையும் கவனத்தில் எடுத்துக் கொள்வது நல்லது.
கருவேப்பிலை, முருங்கை கீரை, மருதாணி இலை
நரை முடியை முற்றிலும் ஒழிக்க கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும். தலைமுடி கருகருவென்று வலுவாக வளரும். தலைக்கு குளித்த சில நிமிட நேரத்தில் தலைக்கு எண்ணெய் தேய்க்கக் கூடாது. தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலருக்கு செம்பட்டை நிறத்தில் முடி வளர்கிறது. அதோடு முடி அதிகம் கொட்டவும் செய்கிறது. இதனால் முளைக்கீரையைத் தினமும் சாப்பிட்டு வந்தால் நரைமுடி கறுப்பாக மாறும்.
முருங்கை கீரையில் இரும்புச் சத்தும், கால்சியமும் அதிகமாக உள்ளது. இதனால் முருங்கை கீரையை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொண்டால் முடி உதிர்வது நிற்பதுடன் நீளமாக வளரும்.
மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயத் தூள் இரண்டு தேக் கரண்டியும் கலந்து கொள்ள வேண்டும்.
இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாகத் தேய்த்து குறைந்தது ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு சீயக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும்.
குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன்பு தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்துகொள்ள வேண்டும். இப்படிச் செய்து வந்தால் இளநரை மறையலாம்.

