வெற்றிலை, வெறும் இலையல்ல. மருத்துவ மூலிகை.
நரை, திரை, மூப்பு போன்றவற்றை நீக்கி உடலை நோயின்றி காக்கும் தன்மை கொண்டது வெற்றிலை. கற்பக மூலிகைகளில் வெற்றிலையும் ஒன்று. ஆனால் வெற்றிலையின் பயன்பாடு குறையக் குறைய அதன் மருத்துவ குணங்கள் பற்றிய தக வல்களும் பலருக்கும் தெரியாமல் போய்விடுகிறது.
நோய், நொடியின்றி பல வருடம் நம் முன்னோர்கள் வாழ்ந்ததற்கு பல காரணங்களில் வெற்றிலையும் ஒன்று.
வீட்டிற்கு வந்தவர்கள் எந்தவித மனக்கசப்பும் இன்றி செல்வதற்காக வெற்றிலை பாக்கு கொடுப்பது தமிழர்களின் பண்பாடாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. வெற்றிலை கொடுப்பது பாரம்பரியம் மட்டுமல்ல, அதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது.
வெற்றிலை செடி என்பது ஆண்டு முழுவதும் படர்ந்து குட்டை யான பல தண்டு வேர்களைக் கொண்ட ஒல்லியான செடியாகும். இதன் பயன்பாடு 2000 ஆண்டு காலமாக இருந்து வருகிறது.
வெற்றிலை பயன்படுத்தும்போது, அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும்.
வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்து, 3.1% புரதச்சத்து, கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் 'சி' ஊட்டச்சத்து உள்ளது. தற்போதைய ஆய்வுகளில் வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க, நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது.
பொதுவாக வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்தச் சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது, அதேநேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
செரிமானச் சக்திக்கு சிறந்தது வெற்றிலை. வெற்றிலையை வாயில் இட்டு மெல்லுவதால் ஜீரண சக்தி அதிகரிக்கிறது. ஜீரண மண்டலம் நன்றாக செயல்பட்டால் பல நோய்கள் நம்மை அண்டாது. இதற்கு தான் விருந்து முடிந்ததும் வெற்ிலை போடும் பழக்கம் நமது மரபில் உள்ளது.
வெற்றிலையை மென்று சாப்பிடு வதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும்; வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.
வெற்றிலைக்கு வலியை நீக்கும் குணமும் மயக்கத்தைப் போக்கும் குணமும் உண்டு.
மூன்று வெற்றிலைகளை எடுத்து அதைக் கசக்கி, கிடைக்கும் சாற்றில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு நன்றாகக் குழைத்து, நெற்றிப் பகுதியில் பற்று போட்டால் தலைவலி பறந்துபோகும்.
வெற்றிலைச்சாறுடன் இஞ்சிச் சாறு சமமாகக் கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால், நுரை யீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் நெருங்காது. இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்துவது நல்லது.
முகப்பருக்களை நீக்கும்: முகத்தில் பருக்கள் இருப்பின் வெற்றிலையை அரைத்து அதை பருக்கள் உள்ள இடத்தில் தடவி வாருங்கள்.
வெற்றிலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் முகப் பருக்களைப் போக்க உதவும். வெற்றிலை கொதிக்க வைத்த நீரால் முகத்தைக் கழுவி வந்தாலும் பருக்கள் அகலும்.

