இளம் வயதிலேயே பணம் எவ்வளவு முக்கியம் என்பதை குழந்தைகளுக்குப் புரிய வைத்தால் எதிர்காலத்தில் அவர்கள் நிதி நெருக்கடியில் சிக்காமல் விழிப்பாக இருப்பார்கள்.
மேலும் குழந்தைகளுக்கான நிதி தேவை எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம்.
அதனால் குடும்பத்தின் மாதாந்திர செலவுகள் மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதில் குழந்தைகளுடைய தேவைகளை, அவர்களாகவே பூர்த்தி செய்யும் வகையில் தனிப்பட்ட நிதியை ஒதுக்கலாம்.
இந்த நிதியை குழந்தை களின் பங்களிப்புடன் உருவாக்கும்போது சேமிக்கும் ஆர்வத்தை அவர்களுக்கு அதிகரிக்கச் செய்ய முடியும்.
இதற்கான சில வழிமுறைகள் இருக்கின்றன.
குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்கு: குழந்தைகளுக்கு மேற்படிப்பு உட்பட நிதி தேவை எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம். இதில் அவர் களின் தினசரி தேவையை விட நீண்டகாலத் தேவையை நிறைவேற்றுவதே முக்கியம்.
இதற்காக, குழந்தைகள் பெயரில் வங்கியில் தனியாகச் சேமிப்புக் கணக்கு தொடங்கி ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமித்து வரலாம்.
இதில் முக்கியமாக குழந்தைகளுக்குத் தரப்படும் நிதியை அவர்கள் மூலமாகவே கணக்கில் செலுத்தி, சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம்.
ஊக்கத்தொகை வழங்குங்கள்: நீங்கள் சொல்லும் வேலைகளை குழந்தைகள் சிறப்பாகச் செய்யும்போது அதைப் பாராட்டும் வகையில் ஊக்கத்தொகை கொடுக்கலாம்.
இந்த நிதியைக் குழந்தை களுக்கான தனிப்பட்ட நிதியாகக் கருத வேண்டும். அந்தப் பணத்தை குடும்பச் செலவுகளைக் கணக்கிடும்போது, குடும்பத்தில் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை தருவது போல், குழந்தைகளையும் பங்களிக்க செய்ய வேண்டும்.
இதன் மூலம் அவர்கள் குடும்பத்தின் நிதி நிலைமை, அதை மேம்படுத்துவதற்கான வழிகள் என அனைத்தையும் கற்றுக் கொள்ள முடியும்.
குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு பணத்தின் தேவை குறித்தும் அதை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்றும் கற்றுக் கொடுக்க வேண்டும். ஈட்டும் பணத்தைக் கல்வித் தேவைக்குப் பயன்படுத்தும் முறையையும் கற்றுக்கொடுப்பது நல்லது.
"நான் இளம் வயதில் பணமில்லாமல் சிரமப்பட்டேன். என்னுடைய குழந்தைகள் அந்த நிலைக்கு ஆளாகக் கூடாது. அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கிக் கொடுத்து தாராளமாகச் செலவு செய்வேன்" என்று சில பெற்றோர்கள் கூறுகின்றனர்.
அப்படிச் செய்தால் பிற்காலத்தில் அவர்களும் அதே போன்று பணத்தை தாராளமாகச் செலவு செய்யலாம்.
சிறு வயதில் குழந்தைகள் பயன்படுத்திய விளையாட்டு பொருள்களில், நல்ல நிலையில் இருக்கும் பொருள்களை, தேவையானவர்களுக்கு விற்பது, தங்களின் திறமையைப் பயன்படுத்தி உருவாக்கும் பொருள்களை விற்பனை செய்வது, பள்ளிப்படிப்புடன், பகுதிநேர வேலையை மேற்கொள்வது போன்ற வேலைகளைச் செய்து பணம் ஈட்டுவது பற்றி பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். குழந்தைகளுக்கு, பணத்தின் அவசியத்தை புரிய வைக்க வேண்டும். இதற்காக, குறுகியகால பண இலக்குகளை உருவாக்குவது அவசியம். இந்த இலக்கு ஆறு மாதம் முதல் ஓர் ஆண்டு வரை இருக்கலாம். இதைக் குழந்தைகள் மட்டும் இல்லாமல், அனைத்து குடும்ப உறுப்பினர்களும் செய்யும்போது, ஈடுபாடு அதிகரிக்கும்.
விடுமுறை நாள்களில் சுற்றுலா செல்லத் திட்டம் போடுவது, நீண்ட நாள்களாக வாங்க நினைக்கும் பொருள்களை வாங்கத் திட்டமிடுவது, குழந்தைகள் விரும்பும் விளையாட்டுப் பொருட்களை வாங்குவது போன்றவை இதில் அடங்கும்.
குழந்தைகளுக்குப் பணச் சுதந்திரம் அளிப்பதுடன், அதை எப்படி சம்பாதிப்பது, எப்படிச் சேமிப்பது, எதற்குச் செலவழிப்பது என்பதைக் கற்றுக்கொடுத்தால், வளர்ந்தபின் எந்தவித பண நெருக்கடியையும் எளிதில் சமாளிக்கும் பண்பு குழந்தைகளுக்கு உருவாகும்.

