பிரபல காற்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்கமைக் காண நேற்று மாலை நான்கு மணியளவில் ஆர்ச்சர்ட் சாலையில் மக்கள் திரண்டனர்.
'அடிடாஸ்' நிறுவனத்தின் ஆர்ச்சர்ட் சாலை
கடையில் 'வீ காட் திஸ்' எனும் மனநலம் குறித்த கலந்துரையாடல் மாலை 4.15 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற்றது. அந்தக் கலந்துரையாடலில் பிரபல காற்பந்து வீரர் டேவிட் பெக்கம் கலந்துகொண்டார்.
சிங்கப்பூர் காற்பந்து வீரர் இக்ஸான் ஃபாண்டி, சமூக ஊடக பிரபலம் ஜேட் ரஸிஃப், கிறிஸ்டபெல் சுவா
ஆகியோரும் கலந்துரையாடலில் அங்கம் வகித்தனர். வானொலி படைப்பாளர் ஜோக்கிம் கோமெஸ் அந்த நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
"நோய்ப் பரவல் சூழலிலிருந்து எப்படி வெளியே வருவது?' என்றும் மனநலம் குறித்தும் டேவிட்
பெக்கம் பேசினார். அவரைப் பற்றிய சுவாரசிய
கருத்துகளையும் கலந்துரையாடலின்போது பகிர்ந்துகொண்டார்," என்று கூறினார்
கலந்துரையாடலில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தவர்களில் ஒருவரான ராஜ், 22.
"இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பெக்கம்மை நான் நேரில் சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை," என்றார் இணையப் போட்டியில் வென்று நுழைவுச்
சீட்டைப் பெற்ற ராஜ்.
இந்த நிகழ்ச்சிக்குக் கட்டணம் இல்லை
என்றாலும் சமூக ஊடகத்தில் 'அடிடாஸ்' நிறுவனம் நடத்திய போட்டியில் கலந்துகொண்டு வெல்பவர்
களுக்கு நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. ஏறத்தாழ 40 பேர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி தொடங்கியது முதல் முடியும் வரை 'அடிடாஸ்' கடையைச் சுற்றி மக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர். அந்நிறுவனம் நேற்று தமது சமூக ஊடகப் பக்கங்களில்
"நுழைவுச் சீட்டுகள் இல்லாதோர் டேவிட் பெக்கம்மைப் பார்க்க வாய்ப்பு இருக்காது. அதனால் அங்கு கூடவேண்டாம்,"
எனவும் பதிவிட்டிருந்தது.
அந்தத் தகவல் பரவலாகியிருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையில் பெக்கம்மின் ரசிகர்கள் தங்களின் திறன்
பேசிகளைக் கையில் ஏந்தியவண்ணம் கடையின் வெளியில் காத்துக்கொண்டிருந்தனர்.
கலந்துரையாடலுக்குப் பின் கடையின் உள்ளே இருந்தவாறு வெளியே காத்திருந்த ரசிகர்களுக்குத் தன் கைகளை
அசைத்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார் டேவிட் பெக்கம். அவரைப் பார்த்த மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர் ரசிகர்கள்.
ஆர்ச்சர்ட் சாலையில் இருக்கும் அடிடாஸ் நிறுவனத்திற்கு வந்திருந்த டேவிட் பெக்கம்மைப் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும் என்ற ஆவலில் வெளியே காத்து நின்ற அவரின் ரசிகர்கள். படங்கள்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்
'அடிடாஸ்' கடைக்கு வெளியே காத்திருந்த தன் ரசிகர்களை நோக்கி கையை ஆட்டி மகிழ்ச்சித் தெரிவித்தார் டேவிட் பெக்கம்.

