விசையை அழுத்தினால் மேல் கூரையிலிருந்து கீழே இறங்கும் படிப்புமேசை. காற்றைத் தூய்மைப் படுத்தும் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்ட சிறிய பக்கவாட்டு மேசைகள். நாம் தூங்கும் நேரத்தையும் விதத்தையும் கணக்கிடுவதுடன், நமக்கு வேண்டிய அளவில் உறுதித் தன்மையை மாற்றிக்கொள்ளும் மெத்தை. அறிவார்ந்த அறைகலன்களில் சில எடுத்துக்காட்டுகள் இவை.
இவை சாதாரண மேசை, நாற்காலி, கட்டில், மெத்தைகள் அல்ல. உணர்கருவிகளும் செயற்கை நுண்ணறிவுத் திறனும் கொண்டவை இந்த அறைகலன்கள். இந்தத் தொழில்நுட்பங்களைக் கொண்டு அறைகலன்களைக் கட்டுப்படுத்தலாம். வேண்டியவாறு மாற்றியமைக்கலாம்.
வீட்டுவேலைக்கு உதவும் அறிவார்ந்த கருவிகள் நம் அன்றாட வாழ்வில் முக்கிய அங்கமாகிவிட்ட நிலையில், அறிவார்ந்த அறை கலன்களும் பிரபலம் ஆகி வருகின்றன.
குறிப்பாக கொவிட்-19 தொற்றுப்பரவலில் வீட்டிலிருந்தபடி வேலை செய்த மக்கள், தங்கள் வீடுகளை அறிவார்ந்த அறைகலன்கள் இன்னும் வசதியாக்கும் என்று நம்புகின்றனர்.
கடந்த 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2021ல் அறிவார்ந்த இல்லக் கருவிகளுக்கான உலகச் சந்தை 11.7 விழுக்காடு அதிகரித்தது என்று இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் நிறுவனம் கூறியது. 2021ல் மட்டுமே 895 மில்லியனுக்கு அதிகமான அறிவார்ந்த இல்லக் கருவிகள் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டன.
ஒப்புநோக்க அறிவார்ந்த அறை கலன்கள் ஒரு புதிய தொழில்துறையாகும். வழக்கமான அறைகலன் களைவிட அதிக விலைக்கு விற்கின்றன. வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பலவித அறை கலன்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை. ஆனாலும் இத்துறையில் வளர்ச்சி வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
அறிவார்ந்த அறைகலன்களை இக்கியா நிறுவனம் கடந்த 2015லிருந்து உருவாக்கி வருகிறது.
கம்பியில்லாமல் மின்னேற்றும் வசதி உள்ள அறைகலன்களை அது அப்போது உருவாக்கியது.
தற்போது அலமாரிகளாகவும் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள், காற்றுத் தூய்மைக் கருவிகளாகவும் உள்ள மேசைகள் போன்றவற்றை அது உருவாக்கியுள்ளது.
மேலும் அதன் அறிவார்ந்த அறைகலன்களை ஒட்டுமொத்தமாகக் கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் ஹப் எனப்படும் அறிவார்ந்தக் கருவியையும் அது மூன்று வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டது.
தனித்தனியே அறிவார்ந்த அறைகலன்களை உருவாக்கு வதைவிட, வீட்டுக்குத் தேவையான அறிவார்ந்த அறைகலன் முறைகளை சில நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன.
கனடாவைச் சேர்ந்த கிரிஃபோன் டெவலப்மண்ட் எனும் நிறுவனம் அறிவார்ந்த கட்டில், மேசை, அலமாரியை உருவாக்கியுள்ளது. இடத்தைச் சேமிக்க அது தரையில் இல்லாமல் மேலே வைக்கப்படும். தேவையானபோது கைபேசி செயலிவழி அவற்றைக் கீழே கொண்டு வர முடியும்.

