தமிழ்மொழி, தமிழர் ஆய்வுத் துறையைத் தொடங்க திட்டமிட்டுள்ள ஃபுளோரிடா அனைத்துலகப் பல்கலைக்கழகம், அதற்காக தமிழ்நாட்டு அரசாங்கத்திடம் 6 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி கேட்டுள்ளது.
அதை முன்னிட்டு தமிழ்நாட்டு அதிகாரிகளிடமும் தமிழ் ஆர்வலர்களிடம் உரையாடி உதவி கோர பல்கலைக்கழகத்தின் பிரதிநிதி ஒருவர் அண்மையில் இந்தியா சென்றிருந்தார்.
அமெரிக்காவின் மயாமி நகரில் அமைந்துள்ள ஃபுளோரிடா அனைத்துலகப் பல்கலைக்கழகம், அரசாங்கப் பல்கலைக்கழகம் ஆகும். இதில் தமிழ்-புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான ஆய்வுத் துறையைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதைத் தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்கு நடத்த 6 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி தேவைப்படுகிறது என்று இந்திய ஊடகங்களிடம் கூறினார் ஃபுளோரிடா அனைத்துலகப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கலைமதி.
உயிரியல் அறிவியல் துறைப் பேராசிரியர் என்றபோதும் இவர், தமிழ்த்துறையை அமைக்கும் முயற்சிகளில் முக்கிய பங்கு வகித்து, அந்த முயற்சிக்கு 90 ஆயிரம் டாலர் நிதி உதவி அளித்துள்ளதாகக் கூறினார்.
புதிதாக அமையவுள்ள தமிழ்த் துறையில், தமிழ்மொழி இலக்கியம், தமிழர் கலை, புலம்பெயர்ந்த தமிழர்கள், வள்ளலார் ஆய்வுகள், வள்ளுவர் ஆய்வுகள் ஆகிய நான்கு அம்சங்களில் ஆய்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களைச் சேர்க்கத் திட்டமுள்ளது. தமிழ்த் துறையை அமைக்க, உலகத் தமிழ்ச் சமூகமும் முன்வந்து நன்கொடை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் பேராசிரியர் கலைமதி.

