நம் உடல்நலனுக்கும் மனநலனுக்கும் கைகொடுக்கும் யோகாசனப் பயிற்சியை முறையாகச் செய்ய வேண்டியது அவசியம்.
யோகாசனப் பயிற்சிகள் பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும், நமக்கே தெரியாமல் பல தவறுகளை நாம் செய்யக்கூடும். அதனால் பின்விளைவுகளும் ஏற்படக்கூடும்.
இணையவழி வகுப்புகளில் கவனம் தேவை
கொவிட்-19 பரவலாலும் அதனால் ஏற்பட்ட முடக்கத்தாலும் உடற்பயிற்சிக் கூடத்திலும் சமூக மன்றத்திலும் நடைபெற்ற யோகாசன வகுப்புகள் இணையத்துக்கு மாறிவிட்டன. கொவிட்-19 பரவல் குறைந்தாலும் இணைய வழி வகுப்புகள் சில சமயங்களில் தொடரவே செய்கின்றன.
மடிக்கணினி, அல்லது கைபேசியைப் பயன்படுத்தி பயிற்றுவிப்பாளர் சொல்லச்சொல்ல சிலர் யோகாசனப் பயிற்சியை செய்கின்றனர்.
சில நேரங்களில் பயிற்றுவிப்பாளர் சொல்வது தெளிவாகக் கேட்காததால், சிலர் பயிற்சிக்கு இடையே தலையைத் தூக்கி மடிக் கணிணி அல்லது கைப்பேசியைக் கவனிக்கக்கூடும். இவ்வாறு செய்வது தவறு.
யோகாசனம் உடல் உறுப்பு களின் செயல்பாடுகளுடன் தொடர் புடையது. ஆகவே, யோகா செய்யும் நேரத்தில் திடீரென்று தலையை மேல் நோக்கி தூக்குவதால் தசைப் பிடிப்பு, எலும்பு வலி போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம்.
இறுக்கமான ஆடைகள் கூடாது
யோகாசனப் பயிற்சிகளின் போது உடல் உறுப்புகளை வெகு இயல்பாகவும் இலகுவாகவும் அசைப்பது அவசியம். இறுக்கமான உடைகளை அணிந்தால் தேவைக்கு ஏற்றபடி உடலை நம்மால் அசைக்க முடியாது. ஆகவே, இறுக்கமில்லாத உடைகளை அணியவும்.
அவசரம் வேண்டாம்
நேரப் பற்றாக்குறையால், நிறைய ஆசனங்களை விரைவாகச் செய்து முடித்துவிட வேண்டும் என்று எண்ண வேண்டாம். ஆசனங்களை நிதானமாகச் செய்தால்தான் உரிய பலன்கள் கிடைக்கும். அத்துடன் யோகாசனம், சரியான மூச்சுப் பயிற்சியுடன் சேர்ந்து செய்யப்பட வேண்டிய பயிற்சி. அதனால் ஆசனங்களுக்கு இடையே போதுமான கால இடைவெளி அளவுகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
அதிகமாக செய்யக் கூடாது
யோகாவில் கடினமான சில ஆசனங்களைச் செய்ய நாள்பட்ட பயிற்சியும், பயிற்றுவிப்பாளர்களின் வழிகாட்டுதலும் தேவை. உடல் ஒத்துழைக்காத ஓர் ஆசனப் பயிற்சியைச் செய்ய வேண்டாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

